2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங். அவர் லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆறு பந்துகளில் அடித்த ஆறு சிக்ஸர்களும் மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அவரது அதிரடி அரை சதமும் இந்திய அணிக்கு மிக முக்கிய போட்டிகளாக அமைந்தன.
மேலும் 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையிலும் இவரது ஆல்ரவுண்டர் பங்களிப்பு இந்திய அணிக்கும் மிகப்பெரிய வகையில் உதவியாக அமைந்தது. மேலும் இந்திய அணி உலக கோப்பையையும் கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தார். அந்தப் போட்டியில் யுவராஜ் சிங்குக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யுவராஜ் சிங்கை கௌரவிக்கும் விதமாக இந்த 2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் விளம்பர தூதராக அறிவித்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உலக கோப்பையில் பங்குபெறும் இந்திய அணி குறித்து 15 வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது.
அதில் முக்கியமாக ரிங்கு சிங் மற்றும் நடராஜன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை என்று சர்ச்சையும் ஆனது. மேலும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் எதற்காக நான்கு ஸ்பின்னர்களுடன் செல்கிறீர்கள் என்று விளக்கம் கேட்கப்பட்ட போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அஜித் அகர்க்கர் குழு அதற்கான முழு விளக்கமும் உலகக்கோப்பையின் போது உங்களுக்கே தெரிய வரும் என்றும் கூறியது.
இந்த நிலையில் உலகக் கோப்பையில் களமிறங்க உள்ள இந்திய அணி குறித்து யுவராஜ் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு யுவராஜ் சிங் பதிலளிக்கும் விதமாக
” ரோகித் சர்மா இப்போது இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. அழுத்தமான சூழ்நிலைகளில் தெளிவான முடிவுகளை எடுக்கும் கேப்டன் நமக்கு தேவை. அந்த தகுதி தற்போது ரோகித் சர்மாவிடம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் 2023ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது ரோகித் சர்மாதான்.
ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணிக்காக விளையாடி 5 கோப்பைகளை பெற்று கொடுத்திருக்கிறார். இவரைப் போன்ற ஒருவர்தான் இந்திய அணிக்கு தற்போது கேப்டனாக இருக்க வேண்டும். ரோகித் சர்மாவை உலகக் கோப்பையுடனும் பதக்கத்துடனும் காண ஆசைப்படுகிறேன். அதற்கு அவர் மிகவும் தகுதியானவர்.
இதையும் படிங்க:அடக்கடவுளே.. தோனிக்கு இப்படி ஒரு பிரச்சனையா.? பாவம் மனுஷன் ரசிகர்களுக்காக ரொம்ப கஷ்டப்படுறாரு
ரோகித் சர்மா எவ்வளவு வெற்றிகளை பெற்றாலும், அவரது குணம் மட்டும் எப்போதும் மாறாது. அதுதான் ரோகித் சர்மாவின் அழகு. எப்போதும் அவர் வேடிக்கையாகவும் சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார். அது அவரது தனிச்சிறப்பு. இதனால்தான் அவர் என்னுடன் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

