இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் காயம் ஏற்பட்ட விவகாரத்தில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மீது கேள்வி எழுப்பியுள்ளார். இங்கிலாந்து தொடரின்போது காயமடைந்த வருண், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கினார். ஆனால் அந்தப் போட்டிக்குப் பிறகு மீண்டும் காயம் ஏற்பட்டதால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து அவர் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
வருண் கடந்த 3 முதல் 4 மாதங்களாக பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் இருந்ததாகவும், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாட அனுமதி கேட்டபோதுகூட அவரை வெளியே அனுப்பவில்லை என்றும் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் குணமடைந்து திரும்ப வேண்டிய நிலையில், 2 முதல் 3 மாதங்கள் அங்கு இருந்த பிறகும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் சிகிச்சை முறைகளை கடந்து ஒரே ஒரு போட்டியில் விளையாடியவுடன் மீண்டும் காயம் ஏற்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “வருண் சக்ரவர்த்தி கடந்த 3 முதல் 4 மாதங்களாக பிசிசிஐ மையத்தில்தான் இருந்தார். டிஎன்பிஎல் தொடரில் விளையாடக் கேட்டபோதுகூட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஒரு மாதத்தில் குணமடைய வேண்டிய அவருக்கு, இத்தனை கட்டுப்பாடுகளுக்குப் பிறகும் ஒரே ஒரு போட்டியில் விளையாடியவுடன் மீண்டும் காயம் ஏற்பட்டது மிகவும் கவலையளிக்கிறது. இதுபோன்ற காய நிர்வாகத்திற்கு உரிய பொறுப்பேற்க வேண்டும். மேலும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு தனித்தனி அணிகளை உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. காயங்களுக்கு ஆதரவு ஊழியர்கள் மட்டுமின்றி வீரர்களும் தங்களது பயிற்சி முறைகளில் கவனம் செலுத்த வேண்டும். 2015-ல் எனக்கு ஒலிம்பிக் லிஃப்டிங் பயிற்சியால் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு அந்தப் பயிற்சியை நிறுத்திவிட்டேன். இதுபோன்ற பயிற்சிகள் வேகம் மற்றும் சக்தியை அதிகரித்தாலும், அது உடலுக்கு பொருந்தவில்லை என்றால் வீரர்களும் அதைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

