13 ஆண்டுகால டெஸ்ட் பயணத்திற்கு விடைகொடுத்த முகமது ஷமி.. திடீர் ஓய்வு முடிவுக்கு பின்னணி என்ன?

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர், தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ஷமி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே நாளில்தான் இந்த ஓய்வு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். கடந்த 2013 நவம்பர் 6ஆம் தேதி கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியாவுக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றுள்ளார்.

- Advertisement -

தனது ஓய்வு குறித்து அவர் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் டெஸ்ட் ஜெர்சியை முதன்முதலில் அணிந்தபோது, எனது நாட்டுக்காக ஏதாவது சாதிக்க வேண்டும் என்பதுதான் ஒரே கனவாக இருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு விக்கெட்டும், போராட்டமும், காயமும், மீண்டு வந்த தருணங்களும் எனக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக்கொடுத்தன” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் என்பது தனக்கு வெறும் ஒரு போட்டி வடிவம் மட்டுமல்ல, வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது கிரிக்கெட் பயணத்தில் துணையாக இருந்த சக வீரர்கள், பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் இந்திய ரசிகர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். குறிப்பாக, தனது திறமையை நம்பி வாய்ப்பளித்த பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பெங்கால் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமியின் சாதனைப் பயணம்

- Advertisement -

36 வயதான முகமது ஷமி, இந்திய அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஆறு முறை ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு இன்னிங்ஸில் 56 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

கடந்த 2023 ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியே ஷமியின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அதே ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் அபாரமாக பந்துவீசிய அவர், வெறும் 7 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடரின் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார்.

தனது ஓய்வு பதிவின் இறுதியில், “இந்தியாவுக்காக விளையாடிய பெருமை எப்போதும் என் மனதில் இருக்கும். நன்றி டெஸ்ட் கிரிக்கெட்” என்று உணர்ச்சிப்பூர்வமாக விடைபெற்றுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles