ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் ஏலம் வெளிநாடுகளில் நடத்தப்பட்ட நிலையில், இந்த முறை அதை மீண்டும் இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி, கோவா இந்த ஆண்டுக்கான ஏலத்தை நடத்தும் இடமாக இறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஏலங்களில் 2024-ம் ஆண்டு ஏலம் துபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது. இந்நிலையில், 2027 ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் கோவாவில் நடைபெற உள்ளது. டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகள் சாத்தியமான தேதிகளாக கூறப்பட்டுள்ளன. இது மினி ஏலம் என்பதால் ஒரே நாளில் நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு வருவது குறித்துப் பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமால், “கோவாவை இறுதி செய்துள்ளோம். டிசம்பர் 15 முதல் 16 வரை நடைபெற வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார். இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் வீரர்கள் ஏலம் மீண்டும் இந்திய மண்ணில் நடைபெற உள்ளது.

