ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் மந்தமாக இருப்பதாக விமர்சனம் செய்தவர்களுக்கு தன்னுடைய பேட்டின் மூலம் விராட் கோலி என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.
பஞ்சாப் அணியின் சொந்த மைதானமான தரம்சாலாவில் இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 58 வது ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி பெங்களூர் அணியின் இன்னிங்சை விராட் கோலி மற்றும் டு பிளஸ்சிஸ் இருவரும் தொடங்கினார்கள். கேப்டன் டூ ப்ளஸ்சிஸ் 9 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேற, அவருக்கு பிறகு களம் இறங்கிய வில் ஜேக்ஸ் ஏழு பந்துகளில் 12 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய ராஜத் பட்டிதார் மற்றும் விராட் கோலி கூட்டணி பஞ்சாப் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது.
மிகவும் சாமர்த்தியமாக விளையாடிய இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்தது. பட்டிதார் 23 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் என 55 ரன்கள் குவித்து வெளியேறினார். அதன் பிறகு கேமரூன் கிரீன் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார். இந்தக் கூட்டணி 46 பந்துகளில் 92 ரன்கள் என அதிரடியாக குவித்தது. 27 பந்துகளில் ஐந்து பௌண்டரிகள், ஒரு சிக்சர் என 46 ரன்கள் குவித்த நிலையில் கிரீன் அவுட் ஆனார்.
அதன் பிறகு தினேஷ் கார்த்திக் ஏழு பந்துகளில் 18 ரன்கள் குவித்தார் இதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடினார். வெறும் 47 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஏழு பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் என 92 ரன்கள் அபாரமாக விளாசினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக 92 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
தனது இந்த இன்னிங்ஸின் மூலம் தனது ஸ்ட்ரைக் ரேட் குறித்து விமர்சனமும், கேலியும் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். விராட் கோலி இந்த போட்டியில் 195.74 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக 20 ஓவர்களில் பெங்களூர் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்துள்ளது.
இதையும் படிங்க:எழுதி வச்சுக்கோங்க.. டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் ஸ்பெஷல் பிளேயர்.. இதை அவர் தெளிவா புரிஞ்சுகிட்டாரு.. சங்ககாரா ஓபன் டாக்
பஞ்சாப் அணியிலும் தரமான அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்தப் போட்டியின் இரண்டாவது பாதியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தப் போட்டியில் விராட் கோலி பஞ்சாப் அணிக்கு எதிராக 1000 ரன்கள் கடந்து சாதனை படைத்திருக்கிறார்.

