கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் 12 வருடங்கள் கழித்து கொல்கத்தா சொந்த மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது.
குறைவான ரன்கள் இலக்கை மும்பை அணிக்கு எதிராக நிர்ணயித்த போதும் வெற்றிக்காக கொல்கத்தா அணி என்ன செய்தது என்பதை அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விரிவாக கூறியிருக்கிறார். மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அவரது திட்டம் போலவே கொல்கத்தா அணி முதல் 50 ரன்களுக்கு உள்ளாகவே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற ஆரம்பித்தது. இதற்குப் பிறகு இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலமாக உள்ளே வந்த மனிஷ் பாண்டே மற்றும் மற்றொரு பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் சரிவில் இருந்த கொல்கத்தா அணியை மீட்டனர். மனிஷ் பாண்டே 31 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 42 ரன்களும், வெங்கடேஷ் 52 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 72 ரன்கள் குவித்தனர்.
இதனால் கொல்கத்தா அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் குவித்தது. பின்னர் இந்த குறைவான இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் கொல்கத்தா அணி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் சூரியகுமார் யாதவ் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று விளையாட வில்லை. இதனால் மும்பை அணி 145 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஸ்டார்க் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
சூரியகுமார் யாதவ் மட்டும் 35 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மும்பை அணியை அதன் சொந்த மைதானத்தில் 12 வருடங்களுக்கு பிறகு தோற்கடித்து இருக்கிறது. இந்த வெற்றிக்கு பிறகு அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும் பொழுது
“நான் பந்து வீசுவதற்கு முன்னர் ஸ்டார்கிடம் உரையாடினேன். இந்தப் போட்டி எவ்வளவு முக்கியம் என்று அவருக்கு எடுத்துரைத்தேன். ஏனெனில் இந்தப் போட்டியில் ஒருவேளை தோல்வி பெற்றிருந்தால் அடுத்து வரும் நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகள் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இதனால் இந்த போட்டி எங்களுக்கு அழகாக அமைந்திருக்கிறது. இந்த போட்டியில் இம்பாக்ட் பிளேயர் விதி எங்களுக்கு பெரிதாக உதவியது. மனிஷ் பாண்டே வாய்ப்புக்காக சிறிது காலம் காத்திருந்தார். அவருக்கு இந்த போட்டியின் மூலம் நல்ல ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. சிறப்பாக விளையாடி நல்ல டோட்டலை குவித்தோம். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த டோட்டலை வைத்துதான் வெற்றி பெற வேண்டும் என்று எங்கள் அணியிடம் கூறினேன்.
எங்கள் அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் மிகவும் அற்புதமாக பந்து வீசினர். சரியான லைன் அண்ட் லென்தில் துல்லியமாக வீசினார்கள். இந்த போட்டியில் வெங்கடேஷ் ஐயர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் வெளியே சென்று தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

