நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 58வது ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது.
இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூர் அணி தொடர்ந்து நீடித்தும் பஞ்சாப் அணி வெளியேறியும் இருக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பஞ்சாப் மாநிலம் தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி பேட்டிங் தொடங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக டூப்ளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.டு பிளஸ்சிஸ் ஒன்பது ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து வந்த வில்ஜாக்ஸ் 12 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அதற்கு பிறகு பட்டிதார் மற்றும் விராட் கோலி கூட்டணி ஜோடி சேர்ந்தது.
இந்த கூட்டணி 32 பந்துகளுக்கு 76 ரன்கள் குவித்தது. இதில் மிகச்சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் ஏழு பவுண்டரி, மற்றும் ஆறு சிக்சருடன் 92 ரன்கள் குவித்தார். பட்டிதார் 23 பந்துகளில் 52 ரன்களும், கேமரூன் கிரீன் 27 பந்துகளில் 46 ரன்களும் குவித்தனர். இதனால் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது.
இதன்பிறகு வெற்றியிலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிரபு சிம்ரன் ஆறு ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பேர்ஸ்டோ உடன் ஜோடி சேர்ந்து ரூசோ பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடி ஓரளவு பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளித்தது.
27 பந்துகளில் 9 பவுண்டரிகள் மூன்று சிக்சர்கள் என 61 ரன்கள் குவித்த நிலையில், ரூசோ ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்த பேர்ஸ்டோ பதினாறு பந்துகளில் 27 ரன்களும் பின்னர் மிடில் வரிசையில் களமிறங்கிய சஷாங்க் சிங் 19 பந்துகளில் 37 ரன்களும், கேப்டன் ஷாம் கரண் 16 பந்துகளில் 22 ரன்களும் குவிக்க 17 ஓவர்களிலேயே 181 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையும் படிங்க:சாதனை மேல் சாதனை படைத்த விராட் கோலி.. பஞ்சாப் அணிக்கு எதிராக 1000 ரன்கள்.. ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி
இதனால் பெங்களூர் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் மிகச் சிறப்பான வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றில் தொடர்ந்து நீடிக்கிறது. தோல்வி அடைந்த பஞ்சாப் அணி இந்த போட்டியுடன் லீக் சுற்றுத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. பெங்களூர் அணி தரப்பில் பந்துவீச்சில் சிராஜ் சிறப்பாக பந்துவீசி நான்கு ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

