இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற உலகக் கோப்பையின் 29 வது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அனைத்து வெற்றியின் மூலம் இந்தியா மீண்டும் முதலிடத்திற்கு சென்று இருக்கிறது.
முன்னதாக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 229 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடி 108 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சூரியகுமார் யாதவ் 49 ரன்களும் கேஎல் ராகுல் 39 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் சமீ 4 விக்கெட்டுகளும் பும்ரா மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. மேலும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக ஒரு உலக கோப்பையில் நான்கு போட்டிகள் தோற்பது இதுவே முதல்முறை. மேலும் இந்த உலகக்கோப்பை போட்டியில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள ஒரே அணி இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கிற்கு இணையாக இந்திய அணியின் பந்துவீச்சு ஒரு போட்டியிலும் மெருகேறி கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு ஆள் அவுட் ஆகி இருக்கிறது.
இந்நிலையில் போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா ” நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் தான் வந்தோம். ஏதேனும் ஒரு சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வேண்டி வரும் போது அதற்கு இது பயிற்சியாக அமையும். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தனர். ஆட்டத்தின் துவக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகள் இழந்தது பெரும் பின்னடைவாக அமைந்தது” என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்” இந்த ஆடுகளத்தில் எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு இலக்கத்தை அடைய வேண்டும் என்று நினைத்தோம். ஒரு சில ஆட்டக்காரர்களுக்கு நன்றாக அமைந்தது. ஆனாலும் அவர்கள் ஆட்டம் இழந்தார்கள். நானும் இன்னும் சிறப்பாக ஆடி இருக்க வேண்டும். மொத்தத்தில் நாங்கள் எடுத்த டோட்டலில் 30 ரன்கள் குறைவுதான்”என தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா பந்துவீச்சாளர்களை சிறப்பாக பாராட்டினார்.
அவர்கள் குறித்துப் பேசிய ரோஹித் ” இது போன்ற போட்டிகளை நீங்கள் ஒவ்வொரு நாளும் காண முடியாது. நாங்கள் எப்போதும் பந்து வீச வரும்போது ஆரம்பத்தில் ஒரு சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று நினைப்போம். எங்கள் பந்துவீச்சாளர்களும் அதற்கு ஏற்றார் போல் விக்கெட் எடுத்து கொடுப்பார்கள். இதன் மூலம் எதிரணியினருக்கு பிரஷர் போட முடியும். எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை எங்களால் சார்ந்து இருக்க முடியும். ஆட்டத்தின் முக்கியமான தருணங்களில் அவர்கள் எங்களுக்கு விக்கெட் எடுத்து கொடுக்கிறார்கள் . மேலும் ஆடுகளத்தின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் பந்துவீசி எதிரணியை அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறார்கள்” என தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 87 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் இந்தப் போட்டியில் அவர் 18000 சர்வதேசரன்களைக் கடந்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் ரோகித் சர்மா இந்த வருட உலக கோப்பையில் 398 ரன்கள் எடுத்திருக்கிறார் . இந்திய அணிக்காக இந்த உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் இவர் தான். இதில் இரண்டு அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும்.

