ஐபிஎல் 68-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
வீழ்த்தியது மட்டுமில்லாமல் நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதியும் பெற்றுள்ளது. ஆனால் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் சிவம்தூபேதான் என சிஎஸ்கே ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டி என்பதால் சேசிங் செய்யும் அணிக்கு இந்த இலக்கு என்பது எட்ட கூடியதாகவே அமையும்.
ஆனால் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் முதல் பந்திலேயே மேக்ஸ் வெல்லின் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இந்த சீசன் முழுவதும் அவரைச் சுற்றியே பெரும்பாலும் சென்னை அணியின் பேட்டிங் வரிசை அமைவதால், இந்த சீசனில் அவர் ஆட்டம் இழந்த உடன் சென்னை பேட்டிங் வரிசை சற்று தடுமாறித்தான் போனது. ஆனால் மிடில் ஆர்டரில் ரச்சின் ரவீந்தரா மற்றும் ரகானே ஜோடி ஓரளவு சிறப்பாக விளையாடி அணியை மீட்டது.
முக்கியமான கட்டத்தில் ரகானே ஆட்டம் இழக்க, அதற்கு பின்னர் களமிறங்கிய சிவம் தூபே இந்தப் போட்டியில் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவுமே சோதித்தார். 15 பந்துகளை எதிர்கொண்டு வெறும் ஏழு ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் கூட அடிக்கவில்லை. அதிக பந்துகளை இவர் வீணடித்தார். மேலும் இவரால்தான் நன்றாக விளையாடிய ரச்சின் ரவீந்த்ராவும் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
சிவம் தூபே டி20 உலக கோப்பைக்கு தேர்வானதிலிருந்து அவரது ஆட்டம் மோசமாக இருந்து வருகிறது. கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு டக் அவுட். மூன்று போட்டிகளில் பெரிதாக விளையாடவில்லை. இவரது மோசமான பேட்டிங்கால்தான் சென்னை அணி தோல்வி அடைந்திருக்கிறது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:அவர் விளையாடுவதை பார்த்தால் பயமாக உள்ளது.. நானே அவருக்குப் பந்து வீச விரும்ப மாட்டேன்.. வெற்றிக்கு பின்னர் பாட் கம்மின்ஸ் பேட்டி
மேலும் சீசனின் தொடக்கத்தில் இவரை ஆறுச்சாமி என அழைத்து ரசிகர்கள் இவரை மேலும் உசுப்பேற்றி விட்டதால், அதீத தன்னம்பிக்கையில் இவரது பேட்டிங் பார்ம் தற்போது கவலை அடைந்து வருவதாகவும் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதால் இவர் திரும்பவும் தனது பழைய பார்முக்கு வர வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

