நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறி உள்ளது. இதற்குக் காரணம் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சிதான் என்று சீனியர் வீரர்கள் புகார் அளித்திருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
குஜராத் அணியில் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா 2022ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இவரது கேப்டன்சியால் ஈர்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கடந்த ஏலத்தில் இவரை டிரேடிங் முறையில் வாங்கி ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு இவரையே கேப்டனாக நியமித்தது.
குஜராத் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட வேளையில் மும்பை அணிக்கும் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவரும் நம்பிய நிலையில், அந்த நம்பிக்கையை ஏமாற்றும் விதமாக இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று எட்டு போட்டிகளில் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றோடு முதல் அணியாக வெளியேறி இருக்கிறது.
இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி ஹர்திக் பாண்டியாவை நியமித்தது மும்பை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதன் எதிரொலியாக ஹர்திக் பாண்டியா மைதானத்திற்குள் சென்று டாஸ் போடும்போதும் அல்லது பேட்டிங் செய்ய களமிறங்கும் போதும் அல்லது ஃபீலிங் செய்யும்போதும் அவருக்கு எதிராக மைதானத்தில் இருக்கிற ரசிகர்கள் கரகோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இது ஹர்திக் பாண்டியா பெரிதாக வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும், இது அவரை மனரீதியாக காயப்படுத்தி இருக்கிறது. இதனால் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சுமாரான பங்களிப்பை மும்பை அணிக்கு வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இத்தகைய தோல்விக்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சிதான் என்று அணியின் சீனியர் வீரர்களான சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரிடம் புகார் அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
போட்டியின் போது களத்தில் சீனியர் வீரர்களிடம் எதையுமே கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்த காரணத்தினால்தான் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த நிலைமைக்கு ஆளாகி இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
இதையும் படிங்க:எல்லை மீறும் ஷகிப் அல் ஹசன்.. செல்பி எடுக்க முயன்ற ரசிகரை தாக்க முயற்சி.. வைரலாகி வரும் வீடியோ
இந்த சீசனின் தொடக்கத்தில் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக நியமித்த பிறகு சூரியகுமார் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு தரப்பு ரசிகர்கள் இவர்கள் இருவரும் அது போல் செய்யக்கூடிய ஆட்கள் இல்லை என்றும் இருவருமே மிகவும் நேர்மையானவர்கள் என்றும் கூறி வருகிறார்கள்.

