17 ஆவது ஐபிஎல் தொடரில் 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது. இந்தப் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஒரு பெரும் சாதனையை படைத்திருக்கிறார்.
ஹைதராபாத் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. முதலில் ஆடுகளம் பந்துவீச்சு சாதகமாக இருந்ததால் மெதுவாக தொடங்கிய சன்ரைசர்ஸ் ஜோடி நான்கு ஓவர்களில் 25 ரன்கள் குவித்த நிலையில் முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. அபிஷேக் ஷர்மா எதிர்பாராத விதமாக 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பிறகு நித்திஷ் ரெட்டி மற்றும் டிராவிஸ் கூட்டணி சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தியது. நித்தீஷ் ரெட்டி 76 ரன்களும், டிராவிஸ் ஹெட் 58 ரன்களும் குவித்தனர். இறுதியாக கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்கள் குவிக்க, சன்ரைசர்ஸ் சனி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.
இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. முதல் ஓவரில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் பட்லர் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஆட்டம் இழக்க அதற்குப் பிறகு ஜெயிஸ்வால் மற்றும் ரியான் பராக் கூட்டணி சரிவில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மீட்டது. இந்த இருவர் கூட்டணி 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
பிறகு ஜெய்ஸ்வால் விக்கெட்டை தமிழக வீரர் நடராஜன் முறியடித்தார். அவர் 40 பந்துகளில் 67 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். இதற்குப் பிறகு அவரது கடைசி ஓவரில் நடராஜன் ஹெட்மயர் விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் வீசி நடராஜன் 39 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதற்கடுத்து சன்ரைசர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நடராஜன் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் மொத்தமாக 89 இன்னிங்சில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். மேலும் இந்த தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதற்கு அடுத்த இடத்தில் பும்ரா 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான ஊதா நிற தொப்பி தற்போது நடராஜன் வசமே இருக்கிறது.
இப்படி ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளை படைத்து வரும் நடராஜனை வருகிற டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யாதது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தனது சிறப்பான பங்களிப்பின் மூலம் இந்திய கிரிக்கெட் தேர்வு குழுவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

