நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் லக்னோ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் குவித்தது. முதல் பந்தில் இருந்தே ஆடுகளம் பந்து நின்று தாழ்வாக வந்ததால், மும்பை பேட்ஸ்மேன்கள் கணித்து ஆடுவதில் சிரமப்பட்டனர். இதனால் விரைவாகவே விக்கெட்டுகளை இழந்தனர். தனது 37 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய ரோகித் சர்மா என்று பெரிய ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 10 ரன்களில் வெளியேற, அதற்குப் பிறகு களமிறங்கிய திலக் வர்மா 7 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் பந்தில் டக் அவுட் ஆகியும் வெளியேறினர். பவர் பிளேவிற்குள் 27 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் மாட்டிக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியை வதேரா மற்றும் டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டனர்.
வதேரா 46 ரன்களிலும் டிம் டேவிட் 18 பந்துகளில் 35 ரன்கள் குவிக்க, 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 144 ரன்கள் குவித்தது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணிக்கு அணியின் கேப்டன் கே எல் ராகுல் 28 ரண்களும், மார்க்கஸ் ஸ்டானிஸ் 45 பந்துகளில் 62 ரன்களும் குவிக்க, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
மும்பை இந்தியன்ஸ் தோல்விக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் ஹார்த்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது
“பவர் பிளேவில் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்த பிறகு எங்களால் மீண்டு வர முடியவில்லை. அந்த இடத்திலிருந்து மீண்டு வராமல் கோட்டை விட்டோம். ஆடுகளம் பேட்டிங் செய்யும் வகையில் நன்றாகவே இருந்தது.களத்தில் ஒரு நேரம் எழுச்சியாகவும், ஒரு நேரம் தாழ்வாகவும் இருக்கும்.
ஆனால் போராடுவது மட்டுமே எனது நம்பிக்கையாக எப்போதும் இருந்திருக்கிறது.இப்போது கடினமாக உள்ளது. இந்த போட்டியின் மூலம் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது என்று நினைக்கிறேன். வதேரா ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க:தொடர் தோல்வியால் தவிக்கும் மும்பை அணி.. மும்பையால் பாதிப்படைந்த சிஎஸ்கே.. லக்னோ அணி எளிதில் வெற்றி
கடந்த ஆண்டும் ஒரு மிகச் சிறப்பாக நன்றாக விளையாடினார். ஆனால் டீம் காம்பினேஷனுக்காக சீசனின் தொடக்கத்தில் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கவில்லை. அவர் விளையாடும் விதத்தை பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் இந்திய அணிக்காகவும் மிக நீண்ட காலம் விளையாடுபவர் போல் தெரிகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார்.

