2023 ஆம் ஆண்டின் 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இது 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியாகும். 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த உலகக்கோப்பை தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிய நிலையில் நான்காவது இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் டிக்கெட் அணியின் மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அணியும் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை இந்தியா விளையாடியிருக்கும் 8 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் இந்த உலக கோப்பையில் வீழ்த்த முடியாத அணியாகவும் இந்தியா விளங்கி வருகிறது.
பேட்டிங் பௌலிங் மற்றும் பீல்டிங் என சகல துறைகளிலும் இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இந்திய அணி தான் இந்த வருட உலக கோப்பையை கைப்பற்றும் என தெரிவித்துள்ளனர். சமீபத்திய பேட்டிகளில் கூட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் பிரட் ஹாக் ஆகியோர் ரெஸ்ட் ஆப் த வேர்ல்ட் அனிமியால் மட்டுமே இந்தியாவை வீழ்த்த முடியும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் துவக்க வீரரான மைக்கேல் வாகன் இந்த அணி தான் இந்தியாவை வீழ்த்தும் என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ஆடம் கில்கிரிஸ்ட் மற்றும் டெமியன் மார்ட்டின் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தக் கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் மற்றும் மைக்கல் வாகன் இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியதற்கு பரிசாக சாக்லேட் கேக் ஒன்றை மைக்கேல் வாகனுக்கு கொடுத்திருந்தார் வாசிம் ஜாஃபர். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மைக்கேல் வாகன், வாசிம் ஜாஃபருக்கு தான் ஒரு பரிசு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் வாகன் ” என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட் வாஷிம் ஜாஃபர் தான். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அவருடைய கேட்ச்சை கெவின் பீட்டர்சன் பிடித்தார். சமூக வலைதள போட்டியில் ஒரு சில முறை அவர் என்னை வீழ்த்தி இருக்கிறார். எனினும் அவருக்கு ஒரு பரிசு ஒன்றை நான் தயார் செய்து வைத்திருக்கிறேன். இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தியதும் அவருக்கு பரிசு கிடைக்கும்” என தெரிவித்திருக்கிறார் வாகன்.
இதிலிருந்து இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி தான் இந்தியாவை வீழ்த்தும் என மைக்கேல்வாகன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார் . கடந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்களது உலகக்கோப்பை வெற்றி கணக்கை துவங்கியது. மேலும் அதற்கு முன்பு நடைபெற்ற மூன்று போட்டிகளைக் கொண்ட தொடரிலும் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

