ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் கோலி பங்கேற்பது குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்
17வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இன்னும் ஓரிரு வாரங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மற்றும் ஒரு தகவலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று தனது அணியினருடன் இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்ற வேளையில், பெங்களூரு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து பல சர்ச்சையான தகவல்கள் வெளிவருகின்றன. கடைசியாக ஆப்கானிஸ்தான அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி பங்கேற்றார்.
பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி 20ஆம் தேதி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு மகன் பிறந்துள்ளதாகவும், அவருக்கு அகாய் கோலி என்று பெயர் சூட்டி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இதனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று போட்டிகளிலும் விராட் கோலி விலகினார்.
அத்தம்பதிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “விராட் கோலி சில காரணங்களால் விளையாடவில்லை. ஒருவேளை அவர் ஐபிஎல் தொடரிலும் விளையாடாமல் இருக்கலாம்” என்று சர்ச்சையான கருத்தைத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விராட் கோலியின் நெருங்கிய நண்பரான பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணியின் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி அளிக்கும் விதமாக விராட் கோலி குறித்துக் கூறுகையில்
“விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? இல்லையா? என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் பெங்களூருவில் அவருடன் சிறிது நேரம் செலவிடுவதற்காகவும் மற்றும் பேட்டிங் செய்யும் சில வீரர்களுக்காகவும் நான் வர வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் இப்போதைக்கு ஐபில் முதல் சில வாரங்களுக்கு நான் மும்பையில் இருந்து வர்ணனை செய்யப் போகிறேன். எங்கள் வர்ணனைகளை நேரடியாகக் கண்டு களியுங்கள். அதன் பின்னர் கிரிக்கெட் தளத்திற்கு நானும் வருவேன்” என்று டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார். அதாவது விராட் கோலி இந்த ஐபிஎல்லில் விளையாடப் போதை மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.

