ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்திலும், மற்ற போட்டிகள் பாகிஸ்தான் மைதானங்களிலும் நடக்கவுள்ளன.
இதற்காக சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கவுள்ள 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால், இந்திய அணி வீரர்கள் எந்த பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை.
ஃபார்முக்கு வந்த விராட் கோலி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலேயே இந்திய அணி வீரர்கள் ஃபார்முக்கு திரும்பியுள்ளனர். குறிப்பாக சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் பேட்டில் இருந்தும் ரன்கள் வந்துள்ளன. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இருவரும் திணறிய நிலையில், ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஃபார்முக்கு வந்துள்ளனர்.
அதிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 37 ரன்கள் எடுத்தால், மிகப்பெரிய சாதனை ஒன்றை படைக்க முடியும்.
சாதனை படைப்பாரா?
இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 285 இன்னிங்ஸில் ஆடியுள்ள விராட் கோலி, 13,963 ரன்களை விளாசி இருக்கிறார். அடுத்த போட்டியில் 37 ரன்கள் எடுத்தால், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 14 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸில் 14 ஆயிரம் ரன்களையும், சங்கக்காரா 378 இன்னிங்ஸில் 14 ரன்களையும் விளாசி இருக்கிறார்.
அதேபோல் இந்த சாம்-பியன்ஸ் டிராபி தொடரில் 173 ரன்களை விளாசினால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலியால் படைக்க முடியும். தற்போது ஷிகர் தவான் 701 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல் 263 ரன்களை விளாசினார், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும்.

