இந்திய அணியின் ஹோம் சீசன் வருகின்ற வியாழக்கிழமை பங்களாதேஷ் அணியுடன் நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பமாகிறது. இந்திய அணி பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வலை பயிற்சியின் போது நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் 6.5 அடி உயரமுள்ள வலைப் பயிற்சி வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக தடுமாறிய நிகழ்வு இந்திய ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது.
இந்திய அணி 45 நாட்கள் ஓய்விற்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறது இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போட்டிக்காக அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரர் விராட் கோலி ஆகியோரும் சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பி இருக்கும் பும்ராவும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தடுமாறிய நிகழ்வு ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. வலைப் பயிற்சியின் போது பும்ரா பந்துவீச்சை எதிர்கொண்ட விராட் கோலி எல்பிடபிள்யூ ஆனார். மேலும் பும்ரா வீசிய அவுட் ஸ்விங்கர் பந்துகளையும் விராட் கோலியால் விளையாட முடியவில்லை. மேலும் இந்திய அணியின் வலைப் பயிற்சியின் போது நெட் பௌலராக பந்து வீசிய 6.45 உயரமுடைய குர்னூர் ப்ரார் என்பவரது பந்துவீச்சிலும் விராட் கோலி தடுமாறினார். பங்களாதேஷ் அணியின் 6.5 அடி உயரம் கொண்ட வேகப்பந்து வீச்சாளரான நவீத் ராணாவை எதிர் கொள்வதற்காக இந்திய அணி புதிய நெட் பவுலரை களம் இறக்கி இருந்தது.
அவரது பந்துவீச்சிலும் விராட் கோலி தடுமாறினார். குர்னூர் ப்ரார் பந்து வீச்சில் கிடைத்த அதிகப்படியான பவுன்சை விராட் கோலி கையால முடியவில்லை. அவரது பந்துவீச்சில் பெரும்பாலான பந்துகள் மட்டையில் படாமல் கீப்பர் இடம் தஞ்சமடைந்தன. இது இந்திய ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. விராட் கோலி இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலைப் பயிற்சியின் போது அவரது பேட்டிங் ரசிகர்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது.
பயிற்சிக்காக வழங்கப்பட்ட ஆடுகளங்களில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருந்தது பேட்ஸ்மேன்களுக்கு சற்று அசௌகரியமாக இருந்தது. மேலும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா , ரிஷப் பண்ட் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணிக்கு இன்னும் 3 பயிற்சி நேரங்கள் இருக்கிறது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் மோதும் சேப்பாக்கம் மைதானம் பொதுவாக சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனால் இந்திய அணி 3 சுழற் பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முதல் போட்டியில் விளையாடுவார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது யூகங்களை தெரிவித்துள்ளனர். ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் வேத பந்துவீச்சாளர்களாக களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இந்த சீசனில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் நியூசிலாந்து அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது. 2025 ஆம் வருட ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த டெஸ்ட் தொடர்கள் முக்கியமானவை என்பதால் இந்திய அணி தீவிரமாக போராடி வெற்றி பெறும் முயற்சிக்கும்.

