2024 ஐபிஎல் சீசன் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் தற்போது ஐந்தாவது இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள பத்து போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றியும், ஐந்து போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. இனிவரும் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகள் சென்னை அணி கட்டாயம் வெற்றி பெற்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
அதிலும் நான்கு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சென்னையில் நடைபெற உள்ளது. மீதி 3 போட்டிகளும் வெளி மாநிலங்களில் நடைபெற உள்ளதால் சென்னை அணி வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. அப்படியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் கோப்பையை வெல்வது கடினம் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் போதெல்லாம் அணியின் பிளேயிங் லெவன் என்பது கனக்கச்சிதமாக இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் களம் இறங்கும் வீரர்கள் தங்களின் செயல்பாடுகளை அறிந்து சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெற வைப்பார்கள். இதனால் ஐந்து முறை சென்னை அணி சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியது.
ஆனால் இந்த முறை சென்னை அணியின் பிளேயிங் லெவன் என்பது சுத்தமாக செட் ஆகவில்லை. தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் ரகானே இதுவரை செட் ஆகாமல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இந்த நிலையில் ரகானேவை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதே போல டேரி மிச்சல் ஒரு போட்டியில் மூன்றாவது வீரராகவும், மற்றொரு போட்டியில் ஆறாவது வீரராகவும் களமிறக்கப்பட்டு இருக்கிறார். இதனால் அவருடைய இடமும் தெளிவாக செட் ஆகவில்லை.
இதே போல சில போட்டிகளில் அமர வைக்கப்பட்ட மொயின் அலி திடீரென கடந்த சில போட்டிகளாக விளையாடி வருகிறார். கடந்த சீசன்களில் மூன்றாவது இடத்தில் இறங்கி அதிரடியாக விளையாடி வந்த மொயின் அலி இந்த தொடரில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பந்துவீச்சிலும் அவர் சரியாக சோபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போல கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியோடு வங்காதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிகுர் ரஹ்மான் சென்னை அணியை விட்டு விலகுகிறார். மேலும் தீபக்சகர் மற்றும் துஷார் தேஷ் பாண்டே ஆகியோர் காயம் காரணமாக வெளியேறி உள்ள நிலையில், சென்னை அணியின் பந்துவீச்சும் தற்போது கவலைக்குரிய நிலையில் இருக்கிறது. இதனால் சென்னை அணியின் பந்துவீச்சும் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றுமா? என்பது அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

