இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்பை பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவினர் வழங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தேர்வு குழுவினர் மற்றும் சில முன்னணி வீரர்கள் இஷான் கிஷனுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப இருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணியில் முக்கிய அங்கமாக வகித்து வந்தவர் இஷான் கிஷன். கடந்த 2022-ம் வருடம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் மற்றும் அதிவேக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனைகளை நிகழ்த்தினார். ரிஷப் பண்ட் விபத்தில் காயம் அடைந்த பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தொடர்ந்து அணியில் அங்கம் வகித்து வந்தார்.
2023 ஆம் வருட உலகக்கோப்பை இந்திய அணியிலும் இஷான் கிஷன் இடம் பெற்று இருந்தார். எனினும் அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. கடந்த வருடம் இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்று பயணத்தின் போது தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் மன அழுத்தம் காரணமாகவும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க இருப்பதாக அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன் தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
இதன் பிறகு இந்திய அணி இஷான் கிஷனை அணித்தேர்விற்கு பரிசீலிக்கவில்லை. மேலும் அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணியின் தேர்வு குழு இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் அணித்தேர்விற்கு பரிசீலிக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தது. எனினும் இஷான் கிஷன் உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக அவரது ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இருந்தபோதிலும் அவர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார்.
இஷான் கிஷன் போன்றே உள்ளூர் போட்டிகளிலும் காயத்தை காரணம் காட்டி விளையாட மறுத்த ஸ்ரேயாஸ் ஐயரின் ஒப்பந்தத்தையும் பிசிசிஐ ரத்து செய்தது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இஷான் கிஷன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருப்பதாக க்ரிக்பஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
2024-25 இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் ஜார்க்கண்ட் அணிக்கு விளையாட இஷான் கிஷன் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தனிப்பட்ட மற்றும் மன அழுத்த பிரச்சனை காரணமாக விலகி இருந்த இஷான் கிஷன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் தன்னை அணித்தேர்விற்கு பரிசீலிக்கும்படி ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கத்திற்கு வேண்டுகோள் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024/25 ரஞ்சி சீசன் போட்டிகளுக்கான 25 பேர் கொண்ட முதல் நிலை ஜார்க்கண்ட் அணியில் இஷான் கிஷானின் பெயரும் வெளியிடப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் அணியின் கேப்டன் பொறுப்பிற்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்திய அணியின் மூத்த வீரர்கள் மற்றும் தேர்வு குழுவினரின் அறிவுரையை தொடர்ந்து இஷான் கிஷன் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு திரும்பி இருப்பதாகவும் கிரிக்பஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு இஷான் கிஷனின் பெயரும் பரிசீலிக்கப்படும்.

