இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிராக 264 ரன்களை துரத்தி பஞ்சாப் அணி சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 264 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணி பவர் பிளேவில் மட்டும் 116 ரன்கள் எடுத்தது. மேலும் 18.5 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “கேஎல் ராகுல் பேட்டிங் செய்யும்பொழுது பெரிய முயற்சிகள் எதுவும் செய்யாமலே மிகவும் எளிதாக அடித்து ஆடினார். ஆடுகளம் நன்றாக இருப்பதாக தெரிந்தது. எனவே அவர்களால் செய்யும்போது எங்களால் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை வந்தது”
“இத்துடன் நாங்கள் இரண்டு ஓவர்கள் மீதம் வைத்து 220 ரன்னை இரண்டு முறை துரத்தினோம். எனவே அதையே ஞாபகத்தில் வைத்துக் கொண்டு நம்பிக்கை உடன் விளையாடும் படி எங்கள் அணியிடம் சொன்னேன். எங்கள் ஓபனர்கள் அதன்படி சிறப்பாக விளையாடி நல்ல துவக்கம் கொடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

