சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சகார் அடிக்கடி காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியின் போது பாதியில் வெளியேறிய சம்பவம் ரவி சாஸ்திரியை கோபமடைய வைத்துள்ளது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. பின்னர் பஞ்சாப் அணி பேட்டிங் செய்யும்போது முதல் ஓவரை தீபக் சகார் வீசினார். முதல் இரண்டு பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் காயம் காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் தீபக் சகாரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தீபக் சகார் கடந்த மூன்று வருடங்களில் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். அதுவும் இந்த சீசனில் இரண்டு முறை காயம் அடைந்து வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி கூறும் பொழுது
“எப்படி உங்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை. நீங்கள் தொடர்ந்து விளையாடுவதும் கிடையாது. ஆனால் தொடர்ந்து உங்களுக்கு காயம் ஏற்படுகிறது.
உங்களால் தொடர்ந்து நான்கு போட்டிகளில் கூட விளையாட முடியவில்லை. நீங்கள் எதற்காக தேசிய அகாடமிக்கு சென்று பயிற்சி பெறுகிறீர்கள். அங்கு சென்று விட்டு பின்னர் திரும்பவும் மூன்று போட்டிகளில் விளையாடுகிறீர்கள். இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? முதலில் உங்கள் உடலை பலமாக வலுப்படுத்துங்கள். நீங்கள் தொடர்ந்து காயம் அடைந்தால் அது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நிர்வாகத்திற்கும் கடுப்பை ஏற்படுத்தும்.
கண்டிப்பாக உங்களை பார்த்தால் எனக்கு கோபம்தான் வருகிறது. நான்கு போட்டிகளுக்கு ஒருமுறை இப்படி காலை பிடித்துக் கொண்டு வெளியே சென்றால் அனைவருமே எதற்காக இந்த வீரர் இப்படி செய்கிறார். மைதானத்தில் இவருக்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது இவரின் உடலில் என்ன சிக்கல் இருக்கிறது என்று யோசிக்கத் தான் தோன்றும்.
மேலும் பல வீரர்கள் ஐபிஎல் தவிர வேறு எந்த போட்டியிலும், உள்ளூர் தொடரிலும் விளையாடுவது கிடையாது. அதிலும் நான்கு ஓவர் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே. அதைக் கூட சரியாக செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தகுதியற்றவர்களாக மாறிவிடுகிறீர்கள் என்பதுதான் உண்மை” என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

