ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை சொந்த மண்ணிலேயே தோல்வியுடன் தொடங்கி இருக்கிறது பாகிஸ்தான் அணி. தனது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 320 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக டாம் லேதம் 118 ரன்களையும், வில் யங் 107 ரன்களையும் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்பின் 321 ரன்கள் என்ற மெகா இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகீல் – பாபர் அசாம் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் தொடக்க வீரர் சகீல் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரிஸ்வான் ஏமாற்றம்
இதன்பின் வந்த கேப்டன் ரிஸ்வான் 3 ரன்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் பாபர் அசாம் – ஜமான் கூட்டணி இணைந்து விரைவாக ரன்களை சேர்த்தது. 3வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்டஹ் நிலையில், ஜமான் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் வந்த சல்மான் அதிரடியாக ரன்களை குவித்தார்.
இதனால் பாகிஸ்தான் அணி விரைவாக 100 ரன்களை கடந்தது. ஆனால் நேதன் ஸ்மித் வீசிய பந்தில் சல்மான் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த தாஹிர் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 128 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. இதன்பின் விரைவாக ரன்கள் சேர்த்த பாபர் அசாம் 81 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.
பாபர் அசாம் நிதானம்
அவருடன் குஷ்தில் ஷா இணைந்து நன்றாக கம்பெனி கொடுக்க, இம்முறை பாபர் அசாம் 64 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகியது. கடைசி நேரத்தில் குஷ்தில் ஷா மட்டும் போராடி 49 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். இறுதியாக 47.2 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி ஆல் அவுட்டாகியது.
சில நாட்களுக்கு முன் நடந்த முத்தரப்பு தொடரிலும் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி உதை வாங்கியது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் போட்டியில் அதுவும் சொந்த மண்ணில் தோல்வியடைந்திருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த 2 போட்டிகளில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

