இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டி தொடர்களில் விளையாட இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் வேக பந்துவீச்சாளர்கள் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் வருட டி20 உலக கோப்பைக்கு பிறகு ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் ஓய்வு பெற்றனர் இதனைத் தொடர்ந்து கௌதம் கம்பீர் தலைமையில் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளர் நியமிக்கப்படவில்லை. இந்தப் பொறுப்பிற்கு இந்தியாவின் முன்னாள் வேக பந்துவீச்சாளர்களான பாலாஜி, வினய் குமார் போன்றவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேக பந்துவீச்சாளர் மோர்னி மோர்கல் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.
இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது பணி தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கு பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது. மேலும் மோர்கல் பாகிஸ்தான் அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக பணியாற்றிய போது பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். அவரது பயிற்சியின் கீழ் 2023 ஆம் வருட உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து தனது பயிற்சியாளர் பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்தியாவின் பயிற்சியாளராக தனது முதல் போட்டியிலேயே பதில் தந்திருக்கிறார் மோர்கல். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமானா பாசித் அலி பாகிஸ்தான் வீரர்கள் மோர்கலை எவ்வாறு கையாண்டனர் என்பது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் மோர்கலை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார். பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தங்களை மிகப்பெரிய ஜாம்பவான்கள் போல் நினைத்துக் கொண்டு பயிற்சியாளரை மதிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்திய அணியுடன் விளையாடும் அதே பங்களாதேஷ் அணிதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஸ் செய்தது. பங்களாதேஷ் அணி, பாகிஸ்தான் அணியுடன் விளையாடிய விதத்திற்கும் இந்தியாவுடன் ஆடிய விதத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நம்மால் உணர முடியும். பங்களாதேஷ் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பின்தங்கி இருந்தனர். ஆனால் இந்தியா எந்த ஒரு சூழ்நிலையிலும் போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. இது வீரர்களின் மனநிலை அவர்களது சிந்தனை மற்றும் வீரர்களின் கிளாஸ் பொறுத்தது என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை பாராட்டி பேசிய பாசித் அலி தற்போது இந்திய அணியில் இருக்கும் வேக பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களாக திகழ்கின்றனர் என பாராட்டினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின் பந்து வீச்சு கூட்டணி பாகிஸ்தானின் அபாயகரமான பந்துவீச்சு கூட்டணியான வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் சோயப் அக்தர் ஆகியோரைப் போன்று இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

