சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு கிடைக்காததை நினைத்தால் சோகமாகவும், எரிச்சலாகவும் இருக்கும் என்று நியூசிலாந்து அணி கிரிக்கெட்டரும் சிஎஸ்கே வீரருமான மிச்சல் சான்ட்னர் கூறியிருக்கிறார்.
கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சீசனில் முதல் முறையாக வாய்ப்பு பெற்ற சான்ட்னர் பவர் பிளேவிலேயே மிகச் சிறப்பாக பந்துவீசி 3 ஓவர்களில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். தனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அப்போட்டிகளில் எல்லாம் சிறப்பாகவும் விளையாடி இருக்கிறார் சான்ட்னர்.
இந்த சீசனின் முதல் போட்டியிலேயே மிகச் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்த சான்ட்னரை வரும் போட்டியிடிலும் சேர்க்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை கூறிவரும் நிலையில், 2018ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சான்ட்னர் இதுவரை மொத்தமாக 16 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். பேட்டிங்கில் 67 ரன்கள் குவித்ததோடு மட்டுமில்லாமல் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தீக்ஷனா ஆகியோர் சுழற் பந்துவீச்சில் முக்கிய பங்காற்றி வருவதால்தான் இவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடாமல் இருப்பது சோகத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துவதாக சான்ட்னர் கூறியிருக்கிறார்.
இது குறித்து சான்ட்நர் விரிவாக கூறும்பொழுது
“சிஎஸ்கே அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் இருப்பது சோகத்தை ஏற்படுத்துகிறது. அதுவே சில நேரங்களில் எரிச்சலையும் உண்டாகக்கூடும். அதே நேரத்தில் தொடர்ந்து விளையாடாமல் பெஞ்சில் இருக்கும் போது கவனத்தை குவிப்பதும் கடினமாக இருக்கும். இதன் காரணத்தினால் அந்த நேரத்தில் மற்ற வீரர்களுக்கு உதவியாக இருப்பேன். பயிற்சியின் போதும், போட்டியின் போதும் நான் சக வீரர்களிடமும் ஆலோசனை நடத்துவேன். அது எனக்கு பெரிய உந்துதலைக் கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்.
சிஎஸ்கே அணியில் தற்போதுள்ள சூழ்நிலையைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. தீபக்சகார் கடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் காரணமாக வெளியேறினார். மேலும் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்தபிகுர் ரகுமானும் உலகக்கோப்பை காரணமாக தனது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளார். அவரைத் தொடர்ந்து இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களான பத்திராணா மற்றும் தீக்சானா ஆகியோரும் தற்போது இலங்கைக்கு திரும்பியிருக்கின்றனர்.
இதையும் படிங்க:என் வாழ்வில் சிஎஸ்கே மிகப்பெரிய பகுதி.. மஹி பாயிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.. உங்களை மீண்டும் சந்திப்பேன்.. பத்திரானா உருக்கமான பதிவு
இந்த நிலையில் இனி வரும் போட்டிகளில் சான்ட்னருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக சிஎஸ்கேவுக்கு இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருப்பதால், இந்த மூன்று போட்டிகளிலும், சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் பட்சத்தில் இனி வரும் அனைத்து போட்டியிலும் சான்ட்னர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

