சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதும், இந்திய டி20 அணியில் மிகச்சிறப்பாக ஆடி வந்த போதும், சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு அவர் விஜய் ஹசாரே தொடரில் விளையாடாததே காரணமாக கூறப்பட்டது.
விஜய் ஹசாரே தொடரில் சஞ்சு சாம்சன் கேரளா அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் கேரளா கிரிக்கெட் சங்கம் தரப்பில், முறையாக பயிற்சிக்கு வருவோருக்கு மட்டுமே விஜய் ஹசாரே தொடரில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்று தீர்மானமாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடருக்கான பயிற்சியில் ஈடுபடவில்லை.
அதுமட்டுமல்லாமல் உள்ளூர் போட்டிகளின் போது சஞ்சு சாம்சன் மீது பல்வேறு ஒழுங்கீன குற்றச்சாட்டுகளும் முன் காலத்தில் இருந்திருக்கிறது. இந்த சூழலில் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக முன்னாள் நட்சத்திர வீரரான ஸ்ரீசாந்த் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது ஸ்ரீசாந்த் பேசுகையில், இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக விளையாடுவதற்கு கேரளா கிரிக்கெட் சங்கம் தரப்பில் முறையான ஆதரவு அளிக்கப்படுவதில்லை.
கேரளா கிரிக்கெட் நிர்வாகத்தின் மோசமான அணுகுமுறையால் தான் சஞ்சு சாம்சனுக்கு பின் இந்திய அணிக்காக ஆடக் கூடிய வீரர்களை உருவாக்க முடியவில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார். ஸ்ரீசாந்தின் இந்த பேச்சுக்கு கேரளா கிரிக்கெட் சங்கம் பதிலடியை கொடுத்துள்ளது. கேரளா கிரிக்கெட் சங்கம் சார்பாக ஸ்ரீசாந்திற்கு சோ-காஸ் நோட்டீஸும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கேரளா கிரிக்கெட் சங்கம் தரப்பில் பேசும் போது, ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங் செய்த குற்றச்சாட்டில் சிக்கி ஸ்ரீசாந்த் சிறையில் இருந்த போதும் கூட கேசிஏ அதிகாரிகள் நேரில் சென்று அவருக்கு ஆதரவு கூறி வந்தோம். ஸ்ரீசாந்த் மீதான கிரிமினல் வழக்கு ரத்து செய்யப்பட்டாலும், அவர் மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதே உண்மை.
அவரே இப்படியான சூழலில் இருக்கும் போது, மற்ற வீரர்களின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீசாந்த் கவலைப்படத் தேவையில்லை. இதே கேரளா கிரிக்கெட் சங்கத்தின் அணுகுமுறையால் தான் ஸ்ரீசாந்த் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின், ரஞ்சி டிராபி போட்டிகளில் கேரளா அணிக்காக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டில் ஈடுபட்ட வீரர்களுக்கு இப்படியான அணுகுமுறை வேறு எங்காவது அளிக்கப்பட்டுள்ளதா?
சஞ்சு சாம்சனுக்கு பின் கேரளா கிரிக்கெட் சங்கம் இந்திய அணிக்காக விளையாடிய எந்த வீரரையும் உருவாக்கியதா என்று சவால் விடுத்தார். அதற்கு பதில், சஜனா சஜீவன், மின்னுமணி, ஆஷா சோபனா, ஜோஷிதா ( யு19 வீராங்கனை ), முகமது இனான் (யு19 இந்திய வீரர்) ஆகியோரை உருவாக்கியுள்ளோம் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரீசாந்திற்கு முன்னாள் வீரர் என்பதால் மட்டும் இந்த நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. கேரளாவில் நடத்தப்பட்டு வரும் கேரளா கிரிக்கெட் லீக்கில் உள்ள கொல்லன் செய்லர்ஸ் அணியின் இணை உரிமையாளர் என்பதால் இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு அணி உரிமையாளராக ஸ்ரீசாந்த் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு எதிரான கருத்துகளை பேசக் கூடாது என்பதால், இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

