18வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மார்ச் 16ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் வீரர்களின் ஓய்வுக்காக ஒரு வாரம் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்பின் ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து எந்த அணி விளையாடும் என்று எதிர்பார்கப்பட்டது. ஏனென்றால் இதுவரை மும்பை, சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள்தான் அதிகளவில் முதல் போட்டியில் ஆடி இருக்கின்றன. அதேபோல் ஆர்சிபி அணியும் நட்சத்திர அணி என்பதால், அந்த அணியும் அதிகமாக முதல் போட்டியில் ஆடியிருக்கின்றன.
இதனால் சென்னை, மும்பை, ஆர்சிபி ஆகிய 3 அணிகளில் எந்த அணி கேகேஆர் அணியை எதிர்த்து விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த வகையில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மார்ச் 23ம் தேதி நடக்கும் போட்டியில் ஐதராபாத் அணி சொந்த மண்ணில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இறுதிப்போட்டி வரும் மே 25ம் தேதி நடக்கும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றதால், இம்முறை ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடப்பதே வழக்கம்.
அதேபோல் அகமதாபாத், மும்பை, கொலக்டா, ஐதராபாத், சென்னை, பெங்களூர், லக்னோ, முல்லன்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் தரம்பாலா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. அதேபோல் பிளே ஆஃப் போட்டிகள் ஐதராபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டி என்று தொடங்கவுள்ளது என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

