இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பது பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் உலக தரம் வாய்ந்த அணியாக கருதப்படும் இந்தியா இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டியை சமன் செய்த நிலையில் இரண்டாவது போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதன் மூலம் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இந்தியா இழந்திருக்கிறது. பலம் குறைந்த அணியாக கருதப்படும் இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் தோல்வி பல்வேறு தரப்பிலிருந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி இந்திய அணியின் முக்கியமான 2 ஆல் ரவுண்டர்கள் குறித்து தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது பேசிய அவர் இந்திய அணியில் எத்தனை திறமையான வீரர்கள் இருந்தாலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முக்கியமான வீரர்கள் என குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணிக்கு மிக முக்கியமான வீரர்கள். அவர்களுடைய அனுபவம் மற்றும் திறமை இந்திய அணிக்கு இன்றியமையாததாக இருக்கிறது.
கிரிக்கெட் போட்டியில் பேட்டிங் அல்லது பந்துவீச்சு என ஒரு துறையில் மட்டும் இல்லாது சகல துறைகளிலும் அவர்கள் இருவரும் பங்களிப்பை அளிக்க கூடியவர்கள். இவர்களது பங்களிப்பு இந்திய அணியை மற்ற அணிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்களாக இருப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக பேசிய பாசித் அலி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். அவருடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இந்திய அணிக்கு உறுதுணையாக இருக்கும். அவர் இல்லாத இந்திய அணி முழுமை பெற்ற அணியாக இருக்காது. எனினும் பாண்டியா ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுவதற்கு தன்னை தயார்படுத்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தனது உடற் தகுதியை நிரூபிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரவீந்திர ஜடேஜா குறித்து பேசிய பாசித் அலி, ஹர்திக் பாண்டியாவை போலவே ரவீந்திர ஜடேஜாவும் இந்தியாவின் ஒரு நாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத நபர். அவரது பந்து வீச்சு பேட்டிங் மற்றும் பில்டிங் இந்தியா அணிக்கு முக்கியமானதாக இருக்கிறது. அவர் சகல துறைகளிலும் திருப்புமுனையை ஏற்படுத்தி கூடிய வீரராக இருக்கிறார். எனவே ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பும் இந்திய அணிக்கு முக்கியமானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார் .
தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் குறித்து பேசிய பாசித் அலி, அக்சர் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் செய்வதற்கு சாதகமான தட்டையான பாகிஸ்தான் ஆடுகளங்களில் அக்சர் பட்டேலின் பந்து வீச்சு எடுபடாது என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் மைதானங்களில் அக்சர் பட்டேலை விட ரவீந்திர ஜடேஜா அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா போன்ற ஜாம்பவான்கள் இருந்தாலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றால் தான் அது முழுமையான பலம் வாய்ந்த இந்திய அணியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார் பாசித் அலி.

