பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சென்னை டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்தியா களம் இறங்கியது. இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் 35 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் இழந்திருந்த போது மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. மேலும் தொடர்ந்து கன மழை பெய்ததால் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் மழை பெய்யாததால் ஆடுகளம் மற்றும் அவுட்ஃபீல்டு சரி செய்யப்பட்டு நடுவர்களின் மேற்பார்வைக்கு பிறகு நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் சுழற் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி பங்களாதேஷ் அணியை 233 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். அந்த அணியின் வீரர் மோமினுல் ஹக் மிகச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
அவர் 107 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவரை அடுத்து அதிகபட்சமாக கேப்டன் நஜ்முல் ஹுசைன் சாந்தோ 31 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மேலும் அஸ்வின், சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் 2 நாட்கள் மட்டுமே எஞ்சி இருந்ததால் சமணில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி புதிய யுக்தியுடன் களம் இறங்கியது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது ஆட்டத்தை டி20 போல தொடங்கினர். துவக்கத்தில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரின் அதிரடியால் இந்தியா 3 ஓவர்களில் 50 ரன்கள் கடந்து சாதனை படைத்தது. 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் ஒரு அணி 50 ரன்கள் எடுப்பது இதுவே முதல் முறையாகும். இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 23 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா ஆட்டம் இழந்த போதும் மற்ற வீரர்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாடினர்.
குறிப்பாக துவக்க வீரர் யசஷ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார் . கில் இவருக்கு துணையாக விளையாடினார். இவர்கள் இருவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 10 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்து மேலும் ஒரு சாதனையைப் படைத்தது. கில் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பண்ட் 9 ரன்களில் அவுட் ஆனார். அதிரடியாக விளையாடி சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இருவரும் அதிரடியாக விளையாடியதால் இந்தியா, பங்களாதேஷ் அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை கடக்க உதவினர். அதிரடியாக விளையாடிய விராட் கோலி 35 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 4 பௌண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டிகளில் மற்றும் ஒரு அரை சதத்தை பதிவு செய்தார்.
இந்திய அணியின் ஆட்டக்காரர்கள் அனைவரும் விரைவாக ரன் குவிக்க வேண்டும் என்று அதிரடியாக விளையாடியதால் ஜடேஜா 8 ரன்னிலும் அஸ்வின் 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராகுல் 43 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்நிலையில் இந்தியா 285 ரன்கள் 9 விக்கெட்டுகள் இழந்திருந்த போது ரோஹித் சர்மா டிக்ளேர் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்தியா, பங்களாதேஷ் அணியை விட 52 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இந்நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி ஆடிய பங்களாதேஷ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 26 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி தொடர்ந்து விக்கெட்டுகள் இழந்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் சத்மான் இஸ்லாம் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவருக்கு அடுத்தபடியாக அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹீம் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 95 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தார். அவர் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். விராட் கோலி 29 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். மேலும் ரிஷப் பண்ட் 4 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக பெவிலியன் திரும்பினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தொடரை கைப்பற்றி இருக்கிறது. மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக பெறும் ஆறாவது டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் டெஸ்ட் போட்டியில் 2 நாட்கள் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2.5 நாட்களில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி இருப்பது உலக கிரிக்கெட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

