இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை விட 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் துருவ் ஜூரேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியின் ஸ்கோர் முன்னிலை பெற போராடி வருகின்றனர்.
ராஞ்சியில் நடைபெறும் இப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே இங்கிலாந்து அணி பஸ் பால் முறையில் விளையாடினாலும், ஜோ ரூட் இந்த முறை தனக்கே உரித்த பாணியில் பொறுமையாக விளையாடி தனது பேட்டிங் ஃபார்மை அற்புதமாக மீட்டு எடுத்தார்.
அவரைச் சுற்றியே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் துரிதமான ரன்களைச் சேகரிக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 353 ரன்களைக் குவித்தது. இதில் குறிப்பிடத்தக்க வகையில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் க்ராவிலி 42 ரன்களும், பேர்ஸ்ட்டோ 38 ரன்களும், விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் 47 ரன்களும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராபின்சன் 58 ரன்களும் குவித்தனர்.
மிகச் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 122 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவர் இந்த ரன்களைக் குவிக்க 274 பந்துகளை எடுத்துக் கொண்டார். பழைய ஜோரூட்டின் பேட்டிங்கைப் பார்த்த மகிழ்ச்சியில் தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை பறி கொடுத்தது.
2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோகித் சர்மா ஆண்டர்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். கில் 38 ரன்களும், அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மட்டும் நிதானமாக விளையாடி 73 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தற்போது துருவ் ஜுரேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் மட்டுமே களத்தில் இருக்க இந்திய அணி 219 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குல்தீப் யாதவ் பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் டிரெஸ்ஸிங் ரூமில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அவர் பேட்டிங் செய்யும் விதத்தை இமிடேட் செய்வது போன்ற போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. கில் மற்றும் ரோகித் ஆகியோர் களத்தில் நிலைத்து நின்று பேட்டிங் செய்யாமல், குல்தீப் யாதவின் பேட்டிங்கை சற்று கிண்டல் செய்யும் வகையில் செய்கை காட்டியது ரசிகர்களிடையே சற்று கோபத்தினை அதிகரித்து இருக்கிறது.
இருப்பினும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சற்று மோசமடைந்து வரும் நிலையில் இந்த இரு பேட்ஸ்மேன்களும் அணியைக் காப்பாற்ற போராடி வருகின்றனர். இன்னும் மூன்று நாள் ஆட்டம் இருக்கும் நிலையில் இந்திய அணி டிரா செய்யுமா? அல்லது வெற்றி பெறுமா? என்பதை ரசிகர்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

