தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய படுதோல்வியை சந்தித்துள்ளது. செஞ்சுரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது, இந்திய அணி பலவீனமாக இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதை போல் அமைந்துள்ளது.
ஏற்கனவே சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். அந்த தோல்விக்கு மருந்தாக இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சில வெற்றிகளை பெற்று மருந்து போடும் என்று பார்க்கப்பட்ட சூழலில், மீண்டும் மோசமான தோல்வியை பெற்றுள்ளது கூடுதல் ஏமாற்றத்தையே அளிக்கிறது.
இதன் மூலம் 31 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை என்ற வரலாறு தொடர்கிறது. 1992ஆம் ஆண்டு முதல் 9வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும், இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி தொடரை கைப்பற்றியதில்லை. அதேபோல் 4 போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் பேசும் போது, அண்மை காலங்களில் இந்திய அணி பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. என்னை பொறுத்தவரை இந்திய அணி குறைந்த அளவிலான திறமையையே வெளிப்படுத்தியதாக பார்க்கிறேன்.
இந்தியாவில் உள்ள திறமையான வீரர்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை வைத்து பார்க்கும் போது, அவர்கள் நிச்சயம் மிகப்பெரிய தொடர்களை கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பார்த்தால், ஆஸ்திரேலியா மண்ணில் மட்டுமே இருமுறை டெஸ்ட் தொடரை வென்றுள்ளார்கள். கடந்த 2 டி20 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி எங்கிருந்தது என்றே தெரியவில்லை.
இந்திய அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடுகிறது என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர்களிடம் இருக்கும் பணம் மற்றும் வீரர்களை வைத்து இன்னும் அதிகமாக வென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மைக்கில் வாஹனின் கருத்து இந்திய ரசிகர்களிடையே ஏற்புடையதாக அமைந்துள்ளது.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணி ஒருமுறை கூட ஐசிசி தொடர்களை வெல்லவில்லை. மேலும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கவுள்ளது. அதற்கு முன் இந்திய வீரர்களை கிண்டல் செய்வதற்காக மைக்கில் வாஹன் இதனை பேசியதாகவும் பார்க்கப்படுகிறது.

