இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலியா மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது அணியாக உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 291 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்த போது மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
மேக்ஸ்சுவல் இந்த இரட்டை சதத்தின் மூலம் சேசிங்கில் இரட்டை சதம் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். 128 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகளின் உதவியுடன் 201 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் அவர். மேக்ஸ்வெல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் இணைந்து 8-வது விக்கெட் ஜோடியாக 202 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் எட்டாவது விக்கெட்க்கு அதிக ரன்கள் சேர்த்து ஜோடி என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
மேலும் மேக்ஸ்வெல் துவக்க வீரர் இல்லாமல் அடித்த முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். ஆஸ்திரேலியா ஏழு விக்கெட்டுகள் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது தனி ஒரு ஆளாக அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் மேக்ஸ்வெல். மேலும் ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் பேட் செய்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற கபில்தேவின் சாதனையையும் கடந்திருக்கிறார் இவர். சந்தேகமே இல்லாமல் இவர் தான் இந்த போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய மேக்ஸ்வெல் ” பீல்டிங் செய்யும்போது அதிக வெப்பமாக இருந்தது. மேலும் வெப்பத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக உடற் பயிற்சியும் செய்யவில்லை. அதனால்தான் இன்று சிரமப்பட்டேன். இந்தப் போட்டி குறித்து எனக்கு பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை. வணக்கம் போல் பாசிட்டிவாக என்னுடைய அதிரடி ஆட்டத்தை ஆடுவது என்றுதான் முடிவு செய்தேன். அந்த எல்பிடபிள்யூ முடிவிற்கு பிறகு தான் கொஞ்சம் அதிரடியாக ஆடலாம் என முடிவெடுத்தேன்” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இரண்டாவது இன்னிங்ஸில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்விங் இருக்கும் என்று எனக்கு தெரியும். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களும் அதனை பயன்படுத்தி சிறப்பாக வந்து வீசினர். நான் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு சில கேட்ச் வாய்ப்புகள் கொடுத்தேன். அதுவும் கொடுக்கவில்லை என்றால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி எனது அணிக்கு தேவையானதை செய்து விட்டேன். இதனை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
முதல் இரண்டு போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் வெளியேறி விடுவோம் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் எங்கள் அணிக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாக இருக்கிறது” என்று கூறி முடித்தார் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலியா இரண்டாவது அரை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து கொல்கத்தாவில் விளையாட இருக்கிறது.

