இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து பந்து வீச வேண்டும் என தமிழக ரஞ்சி அணியின் கேப்டன் சாய் கிஷோர் விருப்பம் தெரிவித்துள்ளார். 27 வயதான இடதுகை சுழற் பந்து வீச்சாளர் சாய் கிஷோர் சமீபத்திய பேட்டியில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது ஆசை குறித்து தெரிவித்திருக்கிறார்.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள், ஐபிஎல் தொடர் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாய் கிஷோர் முதல் தர போட்டிகளில் 166 விக்கெட்களும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் 92 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். மேலும் கடந்த ரஞ்சி கோப்பையில் தமிழக அணிக்கு கேப்டனாக இருந்து அரை இறுதிப் போட்டிகள் வரை அணியை அழைத்துச் சென்றார். கடந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என 2 துறைகளிலும் தமிழக அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
மேலும் கடந்த வருட ரஞ்சிக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய சாய் கிஷோர் 53 விக்கெட்டுகள் வீழ்த்தி 2023/24 சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் இந்திய அணியில் இதுவரை இடம் கிடைக்கவில்லை. சீனாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய அணியில் சாய் கிஷோர் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணிக்கு தனது பந்து வீச்சின் மூலம் சிறப்பான பங்களிப்பை வழங்கினார். தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற அவர் அந்த அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்தார். இதுபோன்று தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் சமீபத்திய பேட்டியில் இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் தானும் இடம் பெற்று இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பேசிய சாய் கிஷோர் ” இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் நானும் ஒருவன் என நம்புகிறேன். இந்திய டெஸ்ட் அணியில் எனக்கும் வாய்ப்பு கொடுங்கள். நான் அதற்கு தயாராக இருக்கிறேன். எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா இருக்கிறார். அவருடன் இணைந்து பந்து வீசும் போது நிறைய கற்றுக் கொள்வேன். நான் ஜடேஜா உடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் அவருடன் இருந்திருக்கிறேன். அவருடன் இணைந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எனது தன்னம்பிக்கையை மேலும் அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய சாய் கிஷோர் ” நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனெனில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடினமாக பயிற்சி செய்து வருகிறேன். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து என்னுடைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ரஞ்சி சீசன் மற்றும் ஐபிஎல் தொடர்களின் போது பயிற்சி செய்வதற்கு அதிக நேரம் கிடைக்காது. ஓய்வு மற்றும் அடுத்த போட்டிக்கு தயாராகுவதற்கு தான் நேரம் இருக்கும். தற்போது கிடைத்திருக்கும் ஓய்வு நேரத்தில் இந்திய அணிக்கு விளையாடுவதற்காக தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்.
இது என்னுடைய நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது என சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் ஜடேஜா உடன் இணைந்து பந்து வீச வேண்டும் என்று சாய் கிஷோர் கூறி இருப்பதால் அவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கு போட்டி போடுகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது பங்களாதேஷ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் சாய் கிஷோர் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனினும் இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இருப்பதால் சாய் கிஷோருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் தான்.

