2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பின் டி20 உலகக்கோப்பை தொடரை இழந்த போதும், சொந்த மண்ணில் நடந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 10 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றி சாதனை படைத்தது.
இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு 2வது முறையாக ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. இதற்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், ஸ்டீவ் ஸ்மித் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விலகிய மிட்சல் ஸ்டார்க்
அதேபோல் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஹேசல்வுட் காயம் காரணமாக விலக, ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ்-ம் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் கடைசி நேர ட்விஸ்ட்டாக இடதுகை ஜாம்பவானான மிட்சல் ஸ்டார்க் சேர்க்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, பென் டுவார்ஷுயிஸ், நேதன் எல்லீஸ் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே மிட்சல் ஸ்டார்க் விலகலுக்கான காரணம் குறித்த எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால் பிராட் ஹேடின் தரப்பில், மிட்சல் ஸ்டார்க் மனைவியும் ஆஸ்திரேலியா வீராங்கனையுமான அலைசா ஹேலி கர்ப்பமான இருப்பதால், அவர் பாகிஸ்தானுக்கு பயணிக்கவில்லை என்று கூறி இருந்தார். இதனால் மிட்சல் ஸ்டார்க் விலகியதற்கான காரணம் ரசிகர்களிடையே ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கர்ப்பமா இருக்கேனா?
இந்த நிலையில் அலைசா ஹேலி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், நான் நன்றாக இருக்கிறேன். பிராட் ஹேடின் தரப்பில் நான் கருவுற்று இருப்பதாக கூறினார். ஆனால் நான் கர்ப்பமாக இல்லை என்று உறுதியாக கூறி கொள்கிறேன். நாங்கள் இருவரும் நன்றாக இருக்கிறோம். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வேண்டாம் என்ற முடிவில் மிட்சல் ஸ்டார்க் உடையது.
அவர் எப்போதும் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடுவதையே பெருமையாக கருதுகிறார் என்று தெரிவித்தார். இதனால் மிட்சல் ஸ்டார்க் ஓய்வெடுப்பதற்காகவே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. பிப்.22ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

