தற்போது நடைபெற்று வரும் 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. மற்ற அனைத்து அணிகளும் ஏதேனும் ஒரு போட்டிகள் ஆவது தோல்வி அடைந்த நிலையில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரையிறுதிக்கு நுழைந்ததோடு புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது.
மேலும் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்கு உலக கோப்பையில் சவாலாக இருக்கும் என்று கருதப்பட்ட தென்னாப்பிரிக்க அணியை 83 ரண்களில் ஆல் அவுட் செய்து 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. தென்னாப்பிரிக்க இந்த உலகக் கோப்பையில் ஐந்து அணிகளுக்கு எதிராக 300 ரன்கள் எடுத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது . இந்திய அணியின் பேட்டிங் சிறப்பாக இருப்பதோடு பந்துவீச்சு உலக தரத்தில் இருக்கிறது. இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள எதிரணியின் பேட்ஸ்மேன்கள் தயங்கி வருவது இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா இதற்கு முன்பே சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ஐசிசி பிசிசிஐ மற்றும் நடுவர்கள் இந்திய அணிக்கு சாதகமாக விசித்திரமான பந்துகளை வழங்குவதாக தெரிவித்திருந்த அவர் இது குறித்து பரிசோதனைகள் மற்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து போல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியதோடு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் இவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர் .
இந்நிலையில் தற்போது டிஆர்எஸ் தொழில்நுட்பத்தையும் பிசிசிஐ போட்டியை ஒளிபரப்புபவர்களின் உதவியுடன் இந்திய அணிக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். இந்தக் கருத்தை நேற்று தென்னாப்பிரிக்கா அணியுடன் ஆன வெற்றிக்கு பின்பு அவர் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் பதிவு செய்திருக்கிறார். கிரிக்கெட் உலகில் இந்த கருத்து மீண்டும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” நேற்றைய போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதில் தென்னாப்பிரிக்க வீரர் ரசி வாண்டார் டுசன் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார். இதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இந்திய அணி டிஆர்எஸ் எடுத்தது. நாம் தகவல் தொழில்நுட்பத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் . ஆனால் நேற்றைய போட்டியில் டிஆர்எஸ் எவ்வாறு செயல்பட்டது. ஒரு இடது கை சுழற் பந்து வீச்சாளரின் பந்து மிடில் ஸ்டெம்பில் பிட்ச் ஆகி எப்படி லெக் ஸ்டெம்பை அடிக்கும்.? என கேள்வி எழுப்பினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இது போன்ற விஷயங்கள் நிச்சயமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். டிஆர்எஸ் விதிமுறைகளும் இந்திய அணிக்கு சாதகமாக பிசிசிஐ பயன்படுத்தி வருகிறது. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இரண்டு அல்லது மூன்று தடவை நடைபெற்று இருக்கிறது. பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடும் போது டிஆர்எஸ் முறையை பயன்படுத்திய போது கடைசி விக்கெட் இருக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. இதற்காக யாரும் பாகிஸ்தான் அணியிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை. இந்தியா உள்நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது” என்ற பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
இவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் இந்திய அணியின் மீதான பொறாமையின் வெளிப்பாடாகவே இருக்கிறது. நேற்றைய போட்டியில் ஜடேஜாவின் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க வீரரான ஹென்றிக் க்ளாஸசனுக்கு எதிராக டிஆர்எஸ் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் கூட கவனிக்காமல் இந்திய அணியை கண்மூடித்தனமாக குற்றம் சாட்டி வருகிறார் என ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

