13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளில் விளையாடும் 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து அந்த அணி குறித்தான விவாதங்களும் விமர்சனங்களும் முன்னால் கிரிக்கெட் வீரர்களாலும் கிரிக்கெட் விமர்சகர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த விமர்சகர்களின் பட்டியலில் தற்போது தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறார், இலங்கை அணியின் லெஜன்ட் முத்தையா முரளிதரன். டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக 800 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 12 வருடங்கள் ஆகியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமை இவரிடமே உள்ளது .
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் முத்தையா முரளிதரன். இது குறித்து பேசி இருக்கும் அவர் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருந்தாலும் மூன்று வீரர்களையும் ஒரே போட்டியில் களமிறக்குவது என்பது கடினமான காரியம். ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக இருப்பதால் இந்தியா ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு பந்து விட்டாளர்களுடன் தான் களம் இறங்கும் என தெரிவித்திருக்கிறார்.
மேலும் சஹால் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்த முரளிதரன்” ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சஹால் தற்போது எந்த மாதிரியான பார்மில் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. t20 போட்டிகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு வீரரை நம்மால் யூகிக்க முடியாது. சமீபத்திய ஒரு நாள் போட்டிகளில் குல்தீப் மற்றும் அக்சர் ஆகிய இருவரும் சஹாலை விட நன்றாக செயல்பட்டு இருக்கிறார்கள். மேலும் தகவல் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாததும் அவர் அணியில் இடம் பெறாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் அனுபவ வீரராக இருந்தாலும் சரி உள்நாட்டு போட்டிகளில் விளையாட வில்லை என்றால் உங்களை எப்படி அணியில் தேர்வு செய்ய முடியும்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முக்கியத்துவம் குறித்து பேசிய முத்தையா முரளிதரன் நீங்கள் தேசிய அணியில் இடம் பெறுவதற்கு ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாடுவதை மட்டுமே அளவுகோலாக வைத்திருக்கக் கூடாது. அதிக அளவில் உள்நாட்டு போட்டிகளிலும் விளையாடி இருக்க வேண்டும். ஐபிஎல்லில் நீங்கள் சிறப்பாக செயல்படுவது மட்டுமே உங்களை தேசிய அணியில் இடம் பெறச் செய்யாது என தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” சஹால் இறுதியாக நியூசிலாந்து அணியுடன் ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடினார். அதன் பிறகு அவருக்கு அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. குல்தீப் யாதவ் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியிலும் சஹால் அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தார். இது போன்ற ஒரு சூழ்நிலையில் அவரை தேர்வு செய்து போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்படாவிட்டால் அது தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்திற்கு எதிரான சர்ச்சையை உருவாக்கி இருக்கும் எனக் கூறினார்.

