இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் முக்கிய தொடரான சையத் அலி முஸ்தாக் டி20 கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டித் தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் பரோடா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழக அணியை வீழ்த்தி திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. தமிழக அணியின் துவக்க வீரர் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உதவியுடன் 57 ரன்கள் எடுத்தார்.
மேலும் தமிழக அணியின் கேப்டன் ஷாருக் கான் 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும் தமிழக அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் 22 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவர்களைத் தொடர்ந்து இறுதிக்கட்ட ஓவர்களில் களமிறங்கிய முஹம்மத் 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 15 ரன்களும் ரித்திக் ஈஸ்வரன் 5 பந்துகளில் 10 ரன்களும் குவிக்க தமிழக அணி 20 ஓவர்களில் 221 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் மட்டும் இழந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தங்களது இன்னிங்ஸை தொடங்கிய பரோடா அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும் அந்த அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா மற்றும் பனு பனியா ஆகியோர் பரோடா அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு கட்டத்தில் 66 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்த பரோடா அணி இவர்களது சிறப்பான ஆட்டத்தால் 121 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு முன்னேறியது.
எனினும் அந்த அணிக்கு கடைசி 7 ஓவர்களில் 101 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடியாக தனது இன்னிங்ஸை தொடங்கிய ஹர்திக் பாண்டியா சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாசினார். இவரது ஆட்டத்தால் பரோடா அணிக்கு வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் 1 ஓவர் சிறப்பாக வீசினால் போட்டி தமிழக அணியின் பக்கம் திரும்பலாம் என்ற சூழல் இருந்தது.
இந்நிலையில் ஆட்டத்தின் 17 வது ஓவரில் 30 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியா போட்டியை முழுவதுமாக பரோடா அணிக்கு சாதகமாக மாற்றினார். தமிழக அணியின் வேகப்பந்துவீச்சாளர் குருஜப்நீீத் சிங் வீசிய அந்த 1 ஓவரில் 4 சிக்ஸர்கள் 1 பவுண்டரி மற்றும் ஒரு சிங்கிள் எடுத்தார் ஹர்த்திக் பாண்டியா. மேலும் அந்த ஓவரில் ஒரு நோ பால் வீசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஓவர் பரோடா அணி எளிதாக வெற்றி பெற காரணமாக அமைந்தது.
இந்த ஓவரை வீசிய குருஜப்நீீத் சிங் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணிக்கு வாங்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனி ஆளாக போட்டியை மாற்றிய ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இவரது அதிரடியால் பரோடா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. மேலும் ஹர்திக் பாண்டியா இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

