2024ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கையோடு இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி வகித்த ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கு பெரிய ஐசிசி தொடர்கள் ஏமாற்றம் அளித்த போதிலும், கடைசியாக நடைபெற்ற டி20 உலக கோப்பை அவருக்கு நல்ல ஆறுதல் அளித்துள்ளது. தனது பயிற்சியாளர் கடமையை சிறப்பாக செய்த மனநிறைவுடன் தற்போது அவர் பதவியை விட்டு விலகி இருக்கிறார். டிராவிட்டுக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கப் போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளத்தை சுற்றி வந்தது.
இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் தான் அதற்குப் பிறகு பொறுப்பேற்க போகிறார் என்ற தகவல் வெளிவந்தாலும் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் வாரிய தரப்பிலிருந்து வெளிவரவில்லை. இந்த சூழ்நிலையில் நேற்று கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பயிற்சியாளர் பதவியேற்ற உடன் கௌதம் கம்பீர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்தியா எனது நாடு எனது அடையாளம். இந்திய அணிக்காக சேவை செய்வதை நான் மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். இந்திய அணிக்கு மீண்டும் திரும்பி இருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. முன்பு அணி வீரராக விளையாடிக் கொண்டிருந்த நான் இப்போது ஒரு பயிற்சியாளராக செயல்பட போகிறேன்.
எனக்கு இந்தப் பதவி மிகவும் ஆர்வமாக உள்ளது. எனது ஒரே குறிக்கோள் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்த வேண்டும் என்பதே ஆகும். இந்திய அணி 140 கோடி மக்களின் கனவுகளை சுமந்து கொண்டு செயல்பட்டும், செயல்படவும் இருக்கிறது. ஒவ்வொரு இந்திய மக்களின் கனவை நினைவாக்க என் அதிகாரத்தை பயன்படுத்தி நான் என்ன செய்ய வேண்டுமோ அதை முழுவதுமாக செய்வேன்” என்று கௌதம் கம்பீர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:விராட் கோலிக்கு வந்த சிக்கல்.. பார் மீது எழுந்த சர்ச்சை.. வழக்குப்பதிவு செய்த போலீசார்
பயிற்சியாளராக பொறுப்பேற்றவுடன் கௌதம் கம்பீருக்கு வருகிற சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற மிகப்பெரிய சவால்கள் முன் நிற்கிறது. அதை தனது திறமையால் எதிர்கொண்டு இந்த இரு கோப்பைகளையும் இந்திய அணிக்காக வென்று கொடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதை கௌதம் கம்பீர் நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய அணி தற்போது பயிற்சியாளர் லட்சுமணன் தலைமையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது.

