17 வது ஐபிஎல் சீசன் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அப்போது இளம் வீரர் ஹர்சித் ராணா செய்த செயல் கிரிக்கெட் களத்தில் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் இறுதிக்கட்டத்தில் ஆண்ட்ரே ரசலின் அதிரடியால் ஏழு விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ரசல் 64 ரன்கள் குவித்தார். முதலில் நன்றாக பந்து வீசிய ஹைதராபாத் அணி இறுதிக்கட்டத்தில் சொதப்பியது.
பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் அகர்வால் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் நல்ல தொடக்கத்தினை கொடுத்தனர். இதில் இந்திய அனுபவ வீரரான மயங்கி அகர்வால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை நாலா புறமும் சிதறடித்தார்.
21 பந்துகளில் நான்கு பவுண்டரி ஒரு சிக்சர் என 32 ரன்கள் குவித்த நிலையில், இந்திய இளம் பந்துவீச்சாளரான ஹர்சித் ராணா வீசிய பவுன்சர் பந்தினை லெஃப்ட் சைடில் விளையாட முயற்சித்து ரிங்கு சிங்கிடம் ஆட்டம் இழந்து வெளியேறினார். அப்போது அதனை கண்ட ஹர்சித்ரானா அவருக்கு பறக்கும் முத்தம் ஒன்றினை கொடுத்துவிட்டு வழி அனுப்பி விட்டார். இதனைக் கண்ட மயங்க் அகர்வால் சற்று எரிச்சலுடன் களத்தை விட்டு வெளியேறினார்.
இது இப்போது பேசு பொருளாக இருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் கவாஸ்கர் இது போன்ற செயல் தேவையில்லாத செயல் என்றும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் தான் அது எதிர்காலத்திற்கும் நல்லது என்று எச்சரித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது
“மயங்க் அகர்வால் ஆட்டம் இழப்பதற்கு முன்பு உங்களது பந்திலேயே சில பவுண்டரிகளை அடித்தார். அப்போது அவர் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை. இருப்பினும் அவர் ஆட்டம் இழந்து வெளியேறிய போது நீங்கள் அதைச் செய்கிறீர்கள். அவ்வாறு செய்யத் தேவையில்லை மிஸ்டர் ராணா. கிரிக்கெட்டில் இது ஒரு விக்கெட்டாக மட்டுமே பார்க்க வேண்டும்.
நாம் அனைவருமே தற்போது தொலைக்காட்சி யுகத்தில் இருக்கிறோம். நம்மை அனைவருமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் கிரிக்கெட்டினை விளையாடலாம். நீங்கள் விக்கெட் எடுத்தால் உங்கள் அணியினருடன் உங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். ஆனால் எதிரணி வீரரிடம் அது போன்ற செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இளம் வீரரான நீங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும் “என்று கூறியிருக்கிறார்.
இருப்பினும் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய ஹர்சித்ரானா 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவே கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

