17வது சீசன் ஐபிஎல் லீக் தொடரில் நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதன்படி பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக ஷிகர் தவான் மற்றும் பேர்ஸ்டோ களமிறங்கினார். ஷிகர் தவான் ஒரு முனையில் நிதானமாக நின்று விளையாட, மறுமுனையில் விக்கெட்டுகள் சீராக சரிந்த வண்ணம் இருந்தன.
இதில் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா மட்டும் 27 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குறித்தது. பின்னர் 177 எங்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் பெங்களூர் அணி களம் இறங்கியது.
கடந்த ஆட்டத்தைப் போலவே முன்னணி வீரர்கள் ஒவ்வொருவரும் வரிசையாக நடையைக் கட்ட, இதில் விராட் கோலி மட்டும் வழக்கம் போல ஒரு முனையில் நிலையாக நின்று விளையாடிக் கொண்டிருந்தார். முன்னணி ஆட்டக்காரர்களான கேப்டன் டூப்ளசெஸ், கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் சொல்லி வைத்தார் போல மூன்று ரன்களிலேயே அவுட் ஆகி வெளியேறினர்.
பின்னர் விராட் கோலியும் 77 ரன்களில் ஆட்டம் இழக்க, கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் லோம்ரோர் ஆகியோர் மட்டுமே களத்தில் இருந்தனர். இருவரும் ஜோடி சேர்ந்து பெங்களூர் அணியை வெற்றி இலக்கிற்கு அருகில் கொண்டு வந்த நிலையில் கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில் அர்ஸ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என அடித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார். 10 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் மூன்று பவுண்டரி இரண்டு சிக்சர்கள் என விளாசி 28 ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரர் லோம்ரோர் எட்டு பந்துகளில் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 18 ரன்கள் விளாச பெங்களூர் அணியின் வெற்றி உறுதியானது.
ஆர்சிபி அணி வெற்றிக்கு பிறகு பேசிய தினேஷ் கார்த்திக்
“நான் களத்தில் விளையாட வந்த பிறகு முதலில் நிதானம் இல்லாமல் இருந்தேன். சிறிது ரன்கள் எடுத்த பிறகு ஆட்டம் என் கண்ட்ரோலுக்கு வந்தது. லோம்ரோர் அடித்த சிக்ஸ் என் மீதான பிரஷரை முற்றிலுமாக எடுத்தது. எங்கள் இருவருக்கும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. எனவே அவரிடம் அமைதியான ஆட்டத்தினை வெளிப்படுத்துமாறு கூறி வந்தேன். பஞ்சாப் அணியில் ஹர்ஷல் பட்டேல் தந்திரமான பந்துவீச்சாளர். சிறிது நிதானம் இருந்தாலும் அவரிடம் காலியாகி விடுவோம். எனவே ஸ்கூப் ஷாட் ஆட காத்திருந்தேன். இறுதியில் நினைத்தது போலவே ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.
முதல் போட்டியில் சென்னை அணியுடன் ஏற்பட தோல்விக்கு பிறகு சொந்த மைதானத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இருக்கிறது. முதல் வெற்றிக்கு பிறகு பஞ்சாப் அணி தற்போது பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.

