பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை 2-0 என்று இழந்த நிலையில் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. நாளை குவாலியர் நகரில் முதல் டி20 போட்டி தொடங்க இருந்த நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் அதிரடி வீரருமான சிவம் துபே இந்திய அணியில் இருந்து வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
2024 ஆம் வருட உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஜிம்பாப்வே சுற்றுப் பயணம் செய்த இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 3-0 என்று தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் பங்களாதேஷ் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை குவாலியர் நகரில் வைத்து நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி டெல்லியிலும், மூன்றாவது போட்டி ஹைதராபாத் நகரிலும் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டி தொடருக்காக இரு அணி வீரர்களும் குவாலியர் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் சிவம் துபே அணியில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
சிஎஸ்கே அணி ரசிகர்களால் ஆறு சாமி என செல்லமாக அழைக்கப்படும் சிவம் துபேவை சிக்ஸர் துபே எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் அழைத்து வந்தனர். இந்நிலையில் முதல் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதாக தேர்வு குழு தெரிவித்துள்ளது. மேலும் அந்த வலியின் தாக்கம் குறையாததால் சிவம் துபே இந்திய டி20 அணியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தேர்வு குழு அறிவித்திருக்கிறது. மேலும் அவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சிவம் துபே முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டதோடு பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விடும் தூபே சமீபத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் தன்னுடைய ஆட்டத்தை மேம்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2025 ஆம் வருட ஐபிஎல் தொடருக்கு வீரர்களை தக்க வைக்கும் காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் சிவம் துபேவின் காயம் அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் இடம் பிடித்து வந்த கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கும் இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதால் தற்போதைய டி20 தொடரில் இருந்து இந்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளை கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட் டி20 அணியில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறார்.

