ஒன்பதாவது டி20 உலக கோப்பையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் தற்போது இந்திய அணி வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து போட்டி முடிந்த பின்னர் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்த இந்திய அணி 176 ரன்கள் 7 விக்கெட் இழப்புக்கு குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்களும், அக்ஷார் பட்டேல் 47 ரன்களும், சிவம் தூபெ 27 ரன்களும் குவித்தனர். அதற்குப் பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகள் இழந்து தடுமாறினாலும் பின்னர் இறுதிக்கட்டத்தில் கிளாசன் அதிரடியாக விளையாடினார்.
ஐந்து சிக்ஸர்களை விளாசிய நிலையில் 27 பந்துகளில் 52 ரன்கள் குவித்திருந்த போது, பதினாறாவது ஓவரை வீச வந்த பும்ரா, போட்டியை தென்னாப்பிரிக்காவிடமிருந்து இந்தியா பக்கம் திருப்பினார். 16 வது ஓவரை பும்ரா வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதற்குப் பிறகு 18வது ஓவரை வீசி அந்த ஓவரில் ஒரு விக்கெட்டுடன் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்தப் போட்டிக்குப் பின்னர் வெற்றி பெற்றது குறித்து பும்ரா சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து பும்ரா விரிவாக கூறும் பொழுது ” நான் எப்போதுமே உணர்ச்சியை கட்டுப்பாட்டிற்குள் வைத்து வேலை செய்ய விரும்புபவன். ஆனால் இன்று என்னிடம் கூறுவதற்கு வார்த்தைகளே இல்லை. எந்தப் போட்டி முடிந்ததும் நான் அழுவது இல்லை. ஆனால் இவை அனைத்திற்குமே நான் இன்று நேர்மாறாக இருக்கிறேன். என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நாங்கள் ஒரு இடத்தில் சிக்கலில் தவித்த போது, அதிலிருந்து மீண்டு திரும்பவும் மாற்றத்தை எங்கள் பக்கம் கொண்டு வந்தோம்.
இன்று என் குடும்பம் எங்கே இருக்கிறது. இதை விட சிறந்த தருணம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். இது போன்ற பெரிய கிரிக்கெட் தொடரை வென்று விட்டு உங்கள் குடும்பம் உங்கள் பக்கத்தில் இருப்பது நீங்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று விடுவீர்கள். இந்தத் தொடர் முழுவதும் நான் தெளிவாக இருப்பதாக உணர்ந்தேன்.
இதையும் படிங்க:எங்கு ஆரம்பித்தேனோ அங்கேயே முடிக்கிறேன்.. இதை அறிவிக்க இதை விட சிறந்த தருணம் வேறு இல்லை- ரோஹித் பேட்டி
எப்போதுமே நான் பந்து வீசுவதற்கு முன்பு ஒரு பந்து அல்லது ஒரு ஓவர் குறித்து மட்டுமே யோசிப்பேன். அதைத் தாண்டி பெரிதாக யோசிப்பதை நான் விரும்ப மாட்டேன். இல்லையென்றால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. சந்தோஷப்படலாம் கொண்டாடலாம். பதினாறாவது ஓவருக்கு நான் பந்து வீச வந்த போது பந்து பழையதாக இருந்தது. அப்போது பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்று தெரியும். இதனால் பேட்ஸ்மேன்கள் ஷாட் ஆடுவது கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன்” என்று கூறியிருக்கிறார்.

