இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை சென்னையில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 27ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் வைத்து நடைபெற இருக்கிறது.
டி20 உலக கோப்பை மற்றும் இலங்கை தொடருக்குப் பிறகு இந்திய வீரர்களுக்கு நீண்ட நாள் ஓய்வு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பிசியான அட்டவணையில் இந்திய அணி களம் இறங்கி இருக்கிறது. பங்களாதேஷ் அணியுடன் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்து 3 டி20 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இந்தத் தொடர்களுக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை சில வாரங்களுக்கு முன்பு பிசிசிஐ தேர்வு குழு அறிவித்தது. சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பினார். மேலும் காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய கேஎல் ராகுல் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். கார் விபத்தில் படுகாயம் அடைந்து 2 வருடங்களுக்கு மேல் கிரிக்கெட் விளையாடாமல் இருந்த ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் தேர்வானார்.
மேலும் இங்கிலாந்து தொடரின் போது சிறப்பாக விளையாடிய இளம் வீரர்களான சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரல் ஆகியோரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இடது கை வேகப்பந்துவீச்சாளர் யாஸ் தயாள் இந்திய அணிக்கு முதல்முறையாக தேர்வானார். இந்த அணி முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இருக்கிறது. மேலும் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகள் இருப்பதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் மாற்றம் இருக்குமா.? என்ற கேள்வி கிரிக்கெட் வட்டாரங்களில் நிலவி வந்தது.
இந்திய அணி நியூசிலாந்து அண்ணியுடன் ஆன டெஸ்ட் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. தொடர்ச்சியாக அணியின் சீனியர் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதால் இந்திய அணி வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துமா.? என்ற எதிர்பார்ப்பும் கிரிக்கெட் வல்லுனர்களிடம் நிலவி வந்தது. இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு விளையாடும் இந்திய அணியில் துலீப் டிராபி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வீரர்களான ருத்ராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய தேர்வுக்குழு இன்று அறிவித்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்ற அனைத்து வீரர்களும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இடம் பெறுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வீரர்களுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைத்ததால் அணியில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்களின் பட்டியல்: ரோஹித் சர்மா(கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், சர்பராஸ் கான், துருவ் ஜுரல்(விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், யாஸ் தயாள்.

