இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்திருந்தது.
அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து 131 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தும், இந்திய அணியின் அறிமுக வீரரான சர்ப்ராஸ் தான் அரை சதம் அடித்தும் இந்திய அணி நல்ல ஸ்கோரினை எட்ட உதவினர்.
இதை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் நாளைக் காட்டிலும் இரண்டாவது நாளில் ஆக்ரோஷமான பந்து வீச்சினை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் விளைவாக களத்தில் இருந்த குல்தீப் யாதவ் நான்கு ரன்களிலும், ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 112 ரன்களிலும் ஆட்டம் இழந்து வெளியேறினர்.
இதையடுத்து அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அறிமுகவீரர் துருவ் ஜூரேல் ஆகியோர் தற்போது களத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் போட்டியின் 102 வது ஓவரை இங்கிலாந்து அணி வீரர் ரெகான் அஹமத் வீசினார். அவர் வீசிய நான்காவது பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுக்கும் முயற்சி செய்து பிட்சின் நடுப்பகுதியில் ஓடினார்.
இதனைக் கண்ட அம்பயர் வில்சன் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதித்தார். இதனைக் கண்ட அஸ்வின் தான் அனுமதிக்கப்பட்ட எல்லையில் மட்டுமே ஓடியதாக அம்பையரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் இதனைக் கண்டு கொள்ளா அம்பயர் இந்திய அணிக்கு பெனால்டியாக 5 ரன்களை வழங்கினார்.
அதாவது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 ரன்களிலேயே போட்டியினைத் தொடங்கும். முதல் நாள் ஆட்டத்திலேயே இந்திய வீரர்கள் களத்தின் நடுப்பகுதியில் ஓட அதனை அம்பயர் எச்சரித்துள்ளார். பின்னர் இரண்டாவது நாளில் அஸ்வின் மீண்டும் இந்த தவறைச் செய்ய ஐந்து ரன்கள் அபராதமாக விதித்துள்ளார். இதற்கு முன்னர் ரவீந்திர ஜடேஜா நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் பிச்சி நடுப்பகுதியில் ஓட அப்போதும் இந்திய அணிக்கு அபராதமாக ஐந்து ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுப் பிரிவு எம்சிசி 41.41.1 விதியின் படி ஆடுகளத்திற்கு வேண்டுமென்றே சேதத்தினை விளைவிக்கக் கூடாது. ஸ்ட்ரைக்கர் பிட்சின் நடுப்பகுதியில் ஓடினால் உடனடியாக அதிலிருந்து நகர வேண்டும். ஆடுகளத்தில் பேட்ஸ்மேன் நியாயமின்றி களத்தின் நடுப்பகுதியில் ஓடுவதாக அம்பையர் கருதினால் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் இதுவே அந்த விதி சொல்வதாகும்.

