2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை இறுதி போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கின்றன. கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களும் நாளை இந்தியா உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற ஒற்றை பிரார்த்தனையுடன் காத்திருக்கின்றனர்.
இந்த ஆண்டின் உலகக் கோப்பை தொடங்கிய நாள் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய பத்து போட்டிகளிலும் சிறப்பான வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இறுதிப் போட்டியிலும் இந்தியா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
எனினும் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணியுடன் மோதும் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் நாயகன் யுவராஜ் சிங் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். இந்தியா தற்போது ஆடுவதைப் போன்று தொடர்ந்த ஆடினால் இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் விளையாடி இருக்கும் விதம் அவர்களது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இறுதிப் போட்டியில் அவர்கள் மோசமாக விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்தியா இந்த உலக கோப்பையை தோற்பதற்கு ஒரே வழி அவர்களது சொந்த தவறாக மட்டுமே இருக்க முடியும்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இதுவரை மற்ற போட்டிகளில் வெளிப்படுத்திய அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே உலகக் கோப்பையை வெல்ல முடியும். இந்திய அணியாக தவறு செய்யாத பட்சத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம். 2003 உலகக்கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா எப்படி ஆதிக்கம் செலுத்தி விளையாடியதோ அதேபோன்ற ஒரு ஆட்டத்தை இந்தியா இந்த உலகக் கோப்பையில் செயல்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியா தங்களின் மிகச்சிறந்த ஒரு ஆட்டத்தை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இந்திய அணிக்கு முன்பாக அவர்களால் நிற்க முடியாது” என தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணி குறித்து பேசி இருக்கும் யுவராஜ்” ஆஸ்திரேலியா அணி அழுத்தமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தெரியும். மேலும் அவர்கள் ஐந்து முறை உலக கோப்பையை வென்றிருக்கிறார்கள். உலகக்கோப்பை இறுதிப்போட்டி போன்ற பெரிய போட்டிகளை கையாள்வதற்கான பக்குவமும் அனுபவமும் அந்த அணிக்கு இருக்கிறது. எனினும் இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளது. இந்திய அணி தவறு செய்யாத பட்சத்தில் அவர்களை யாராலும் வீழ்த்த முடியாது” என தெரிவித்தார்
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இரண்டு முறை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றும் தோல்வி அடைந்தது. தற்போதைய நடப்பு உலக கோப்பை தொடரில் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பைக்கு காத்திருக்கும் இந்திய அணியின் கனவும் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் கனவும் நிறைவேறும்.

