2024 ஆம் வருட டி20 உலக கோப்பைக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக ஸ்காட்லாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி அந்த நாட்டில் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய ஸ்காட்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் துவக்க வீரர் முன்சி 28 ரன்களும் மேத்யூ கிராஸ் 27 ரன்களும் கேப்டன் பேரிங்டன் 23 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் சீன் அபோட் 3 விக்கெட்டுகளும் ஆடம் ஜாம்பா மற்றும் சேவியர் பார்லெட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் இளம் துவக்க வீரர் ஜாக் ஃப்ரேசர் மெக்குர்க் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிச்சல் மார்ஸ் மற்றொரு துவக்க வீரரான ட்ராவஸ் ஹெட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
இவர்கள் இருவரும் கம்ப்யூட்டர் கேமில் கிரிக்கெட் விளையாடுவது போல் ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சிதறடித்தனர். குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் ட்ராவஸ் ஹெட் ருத்ர தாண்டவம் ஆடினார். பந்துகள் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறந்தன. இவர்களின் அதிரடியால் முதல் 6 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 113 ரன்கள் சேர்த்தது.
டி20 கிரிக்கெட் போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையையும் ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன்பு தென்னாபிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் 6 ஓவர்களில் 102 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. இன்றைய போட்டியில் அந்த சாதனையை ஆஸ்திரேலியா அணி முறியடித்தது. சிறப்பாக விளையாடிய டிராவஸ் ஹெட் 17 பந்துகளில் அரை சதம் எடுத்தார். மேலும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விரைவாக சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் 25 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து ட்ராவஸ் ஹெட் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலீஷ் கேப்டன் மார்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிரடியாக விளையாடிய கேப்டன் மார்ஸ் 12 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் பிறகு ஸ்டோனிஸ் மற்றும் இங்கிலீஷ் ஆகியோர் ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஆஸ்திரேலியா அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோஸ் இங்கிலீஷ் 13 பந்துகளில் 27 ரன்களுடனும் மார்க்க ஸ்டோனிஸ் 8 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது.

