இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி பந்தை மாற்றியது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது என இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 21 ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 236 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெமி ஸ்மித் அபாரமாக ஆடி 111 ரன்கள் எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மிகச் சிறப்பாக விளையாடிய 111 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மேலும் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் 79 ரன்களும் ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் என்ற இலக்கை துரத்தி ஆடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழந்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் முதல் இன்னிங்சில் சதம் எடுத்த ஜெமி ஸ்மித் 39 ரன்கள் எடுத்தார்.
முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி பேட்டிங் செய்தபோது 52 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது அந்த அணியின் முன்னாள் கேப்டனும் மூத்தவிரருமான ஏஞ்சலோ மேத்யூஸ் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார். எனினும் துரதிஷ்டவசமாக 65 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். மேத்யூஸ் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து அணி நடுவர்களின் அனுமதியுடன் பந்தை மாற்றியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட பந்து சேதம் அடைந்ததாக கூறி இங்கிலாந்து அணியினர் பந்தை மாற்றுவதற்கு நடுவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது போதுமான அளவு பழைய பந்துகள் இல்லாததால் செமி நியூ பாலை இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு நடுவர்கள் கொடுத்தனர். இது தொடர்பாக தனது குற்றச்சாட்டினை ஏஞ்சலோ மேத்யூஸ் முன் வைத்திருக்கிறார். இதுகுறித்து ஆட்டத்தின் மூன்றாவது நாள் முடிவின்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஏஞ்சலோ மேத்யூஸ் இங்கிலாந்து அணியினர் பந்தை மாற்றியது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது என குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய அவர் ” ஆரம்ப சரிவிலிருந்து நாங்கள் மீண்டு ரன் குவிக்க தொடங்கிய போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களால் ரன்களை கட்டுப்படுத்த முடியாமலும் விக்கெட் வீழ்த்த முடியாமலும் தடுமாறினர். துரதிஷ்டவசமாக இந்த சூழ்நிலையில் பந்து மாற்றப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் போது போதுமான பழைய பந்துகள் இல்லாததால் செமி நியூ பாலை இங்கிலாந்து அணிக்கு வழங்குவதாக நடுவர்கள் தெரிவித்தனர். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது” என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஏஞ்சலோ மேத்யூஸ் ” நாங்கள் சிறப்பாக விளையாடி புதிய பந்தை அதன் பளபளப்பை இழக்க செய்தோம். இதன் காரணமாக பந்து பேட்டிங் செய்வதற்கு ஏதுவாக இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியினருக்கு நல்ல சைனிங்கில் பந்து கிடைத்தது. இதன் காரணமாக அவர்களால் பந்தை ஸ்விங் செய்ய முடிந்தது. இது ஆட்டத்தின் போக்கையே முழுவதுமாக மாற்றி விட்டது என மேத்யூஸ் தெரிவித்திருக்கிறார். மேலும் 2023 ஆம் வருட அஷஸ் தொடரின் போது 5 வருட பழமையான பந்துகள் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. மேலும் பந்துகளை மாற்றுவது தொடர்பான விதிகளை வரையறுக்க வேண்டும் எனவும் மேத்யூஸ் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக பேசிய மேத்யூஸ் ” அந்த சர்ச்சையில் பந்துகள் எந்த ஆண்டு பயன்படுத்தப்பட்டது என்று எனக்கு தெரியாது. ஆனால் பந்துகளை மாற்றுவதற்கு என குறிப்பிட்ட விதிகள் வரையறுக்கப்பட வேண்டும். அப்படி விதிகள் எதுவும் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் இது போன்று பந்துகள் மாற்றப்படுவது பேட்டிங் செய்பவர்களுக்கு பாதகமாக அமைகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

