ஒன்பதாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றிக்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி சிறப்பாக விளையாடி 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். மேலும் சிவம் தூபே மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தனர். அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைய விட்டாலும், மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர்.
ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் நிலைக்கே சென்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு, பும்ரா முக்கிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுக்க, அதற்கு பின்னால் வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த கிளாசனை ஆட்டமிழக்கச் செய்து, இந்தியாவின் பக்கம் வெற்றியை வரவழைத்தனர். பின்னர் இறுதி ஓவரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக வீசியதால் ஏழு ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கான காரணம் குறித்து ரோகித் சர்மா கூறும் பொழுது “இந்த வெற்றி ஒரு நாளில் எங்களுக்கு வந்துவிடவில்லை. இதற்காக மூன்று, நான்கு வருடங்கள் கடுமையாக உழைத்தோம். ஒரு அணியாகவும், தனிநபராகவும் வெற்றி பெறுவதில் வேகமாக முன்னேறினோம். இந்த வெற்றிக்கு திரைக்குப் பின்னால் நிறைய உழைப்புகள் இருக்கிறது. எங்களின் கடின உழைப்பின் காரணமாகவே இந்த உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம்.
கடந்த காலங்களில் நாங்கள் தோல்வி அடைந்த அணியாகவும் இருந்திருக்கிறோம். ஆனால் நமது வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக இருந்தார்கள். நமது கையை விட்டு ஒரு போட்டி போகும் போது எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த ஆட்டமே உதாரணமாகும். ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் நிலையில்தான் இருந்தது. ஆனால் நாங்கள் முயற்சியை கைவிடாமல் ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். ஒரு அணியாக இது போன்ற வெற்றியை பெறுவதற்குதான் நாங்கள் கடுமையாக உழைத்தோம்.
இதையும் படிங்க:சாம்பியன் கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா.. பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.. பும்ரா அபார பந்து வீச்சு
எனக்கு கிடைத்திருக்கிற வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். முதலில் அணி நிர்வாகம் முதல் கேப்டன் வரை அனைவரும் வீரர்களுக்கு சுதந்திரத்தை அளிக்க வேண்டும். அப்போதுதான் யாராக இருந்தாலும் களத்தில் சிறப்பாக செயல்பட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

