இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பிறகு அதற்கு அடுத்ததாக ஜூன் முதல் வாரத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது.
இதில் இந்தியாவின் சீனியர் வீரர்களைத் தவிர இவர்கள் இரண்டு பேர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
டி20 அணிகளில் சேம்பியன் அணியை நிர்ணயிக்கப் போகும் தொடரான டி20 உலக கோப்பை தொடர் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்கள் சிறந்த 15 வீரர்களை அறிவித்துவிட்டு உலகக் கோப்பைக்காக முழு வீச்சில் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய அணியும் ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த 15 வீரர்களைக் கொண்ட இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பாக அறிவித்தது. இதில் இளம் மற்றும் அனுபவ வீரர்கள் என சரிசமமான கலவையில் இந்திய அணி இந்த முறை அமைந்துள்ளது.
அதில் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தற்போது மிடில் ஆர்டரில் விளையாடிக் கொண்டிருக்கும் சிவம் துபே ஆகிய இருவரும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இடது கை ஆட்டக்காரர்கள் என்பதால் இவர்கள் இருவரின் பங்கு பெருமளவில் உலக கோப்பையில் இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது
“டி20 உலக கோப்பையில் இரு இடது கை பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். அதில் முதல்வீரர் ஜெயஸ்வால். ஜெய்ஸ்வாலின் பேட்டிங் ஸ்டைல் குறித்து அனைவரும் அறிந்ததே. அவர் சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். பயமில்லாமல் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு மிக முக்கிய வீரராக திகழ்வார் என்று கருதுகிறேன்.
இதையும் படிங்க:ரோகித் சர்மாவை இந்த அணிதான் வாங்கணும்.. இந்த மூன்று பேர் காம்பினேஷனில் அணி வேறு மாதிரி இருக்கும்.. வாசிம் அக்ரம் ஓபன் டாக்
அடுத்ததாக மிடில் வரிசையில் களமிறங்கி விளையாடும் சிவம் துபேவின் பங்களிப்பும் இந்திய அணிக்கு முக்கியமானதாக உள்ளது. சிவம் தூபேவின் பேட்டிங் ஸ்டைல் மிகவும் அழகாக இருக்கும். அவர் நின்ற இடத்தில் இருந்து சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் விதம் அவரது திறமையை மேலும் எடுத்துரைக்கிறது. அவர் சுழற் பந்துவீச்சை மட்டுமல்லாமல் தற்போது வேகப்பந்து வீச்சையும் மிகவும் எளிதாக கையாண்டு வருகிறார். அவர் உலக கோப்பையில் 20 முதல் 25 பந்துகள் எதிர்கொண்டால் போட்டியை எப்படி வேண்டுமானாலும் அவரால் மாற்ற முடியும். எனவே இந்த இருவரின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாக கருதுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

