17 வது சீசன் ஐபிஎல் தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. நட்சத்திர வீரர்கள் கொண்ட இரு அணிகள் மோதியதால் இப்போட்டி ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 இவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் தொடக்க ஆட்டக்காரர் பாப் டூப்ளஸ்சிஸ் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் குவித்து தொடக்க அடித்தளத்தை அருமையாக அமைத்தாலும், பின்னால் வந்த வீரர்கள் அதனை சீராக கொண்டு செல்ல மறுத்து சொற்பரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். பிறகு மிடில் ஆர்டர்களில் களம் இறங்கிய அனுஜ்ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடி பெங்களூர் அணி சற்று சவாலான ஸ்கோரை எட்ட உதவியது.
பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் தொடங்கிய சென்னை அணி தனது முதல் சீசனில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவிந்த்ரா சிறப்பாக விளையாடி சென்னை அணிக்கு அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். 15 பந்துகளில் 3 பவுண்டரி, மூன்று சிக்சர் என 37 ரன்கள் விளாசி, முதல் போட்டியிலேயே தனது திறமையை நிரூபித்தார்.
கேப்டன் கெய்க்வாட் 15 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினாலும், அதற்கு பிறகு வந்த அனுபவ வீரரான ரகானே 27 ரன்கள் குவிக்க, பின்னர் இறுதிக்கட்டத்தில் சிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி சென்னை அணியினை 18.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அடைய வைத்து முதல் வெற்றியை பதிவு செய்தனர்.
இதன் மூலம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 16 வருடங்களாக முதல் வெற்றியை பதிவு செய்யாத பெங்களூரின் சோகம் தொடர்ந்து நீடிக்கிறது. சென்னை அணியின் கோட்டை எப்பவும் சென்னை அணிக்குதான் என்பது போல பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சென்னை அணி சிறப்பாக விளையாடியது. ஆனால் தல தோனியின் பேட்டிங்கைக் காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு ப்ளஸ்சிஸ் தோல்விக்கான காரணம் குறித்து கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்
“நீங்கள் எப்போது விளையாடும் போதும் முதல் ஆறு ஓவர்களுக்கு பிறகு பந்து வீச்சாளர்களுக்கு கொஞ்சம் பிடித்தம் கிடைக்கும். சென்னை அணியை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் மிகச் சிறந்த அணி. அவர்கள் சுழற் பந்துவீச்சாளர்கள் உங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்கள். நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக எடுத்தது தோல்விக்கு காரணமாக இருக்கலாம். முதல் 10 ஓவர்கள் விளையாடியது போல ஆடுகளம் மோசமாக இல்லை.
நாங்கள் இன்னும் இரண்டு விக்கட்டுகளை பெற முயற்சித்து இருந்தால் வெற்றி எங்களது பக்கம் இருந்திருக்கும். எனினும் இந்த ஆடுகளித்தில் முதலில் பேட்டிங் செய்வது நல்லது. எங்களது பந்து வீச்சும் அருமையாக இருந்தது. தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். சிஎஸ்கே அணி அதன் கோட்டைக்குத் திரும்பியதும் ரசிகர்களுக்கு வெற்றியை அளித்திருக்கிறது. தல தோனியின் பேட்டிங்கை இன்று ரசிகர்களால் காண முடியாமல் போயிருக்கலாம். இரண்டு அணி ரசிகர்களுமே தோனியை விரும்புகின்றனர். எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்” என்று கூறுகிறார்.

