2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. மொத்தம் 45 நாட்கள் நடக்க இருக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 48 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து நடைபெறுவதால் நிச்சயமாக இந்திய அணி 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை கைப்பற்றும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மேலும் இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவிற்காக விளையாட போகும் வீரர்கள் யார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே நிலவி வந்தது .
இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிகள் துவங்குவதற்கு சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில் பிசிசிஐ உலக கோப்பையில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இன்று வெளியிட்டு இருக்கிறது. உலகக் கோப்பையில் விளையாட போகும் இந்திய அணி தொடர்பான யூகங்கள் மற்றும் கணிப்புகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட 17 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்து உலகக் கோப்பை காண இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்ற இளம் வீரரான திலக் வர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பிரதீஷ் கிருஷ்ணா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் வைத்து உலகக்கோப்பை நடைபெறுவதால் சஹால் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளின் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்ற இளம் வீரர் திலக் வர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் அவர் ஒரு இடது கை ஆட்டக்காரர் என்பதால் இந்திய மிடில் ஆர்டருக்கு பலமாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்தனர். ஆனால் உலகக்கோப்பை அணியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.
மேலும் தமிழக வீரர்கள் ஆன ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கும் உலகக் கோப்பை அணியில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருவரும் ஆப் ஸ்பின்னர் என்பதாலும் ஆல் ரவுண்டர்கள் என்பதாலும் வாய்ப்புகள் வழங்கப்படும் என பலரும் கணித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் உலகக் கோப்பை அணியில் இடமில்லை. அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா ரவீந்திர ஜடேஜா அக்ஷர் பட்டேல் மற்றும் சர்துல் தாக்கூர் என நான்கு ஆல் ரவுண்டர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.

