கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்ஸ்மேன் ஜசன் ராய் தனது சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் நிலையில், கொல்கத்தா அணி அவருக்கு இணையான அதிரடி பேட்ஸ்மேன் ஒருவரை நியமித்துள்ளது.
17வது ஐபிஎல் சீசன் வருகிற 22ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதன் தொடக்கப் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்காக தற்போது பத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தொடரை முடித்த இந்திய அணியின் மூத்த வீரர்களும் தங்களது ஐபிஎல் அணிகளுடன் இணையுள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விலகுவதாக கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்தது. கடந்த சீசனில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய ராய் எட்டு ஆட்டங்களில் விளையாடி 35.63 சராசரியில் இரண்டு அரை சதங்கள் உட்பட 285 ரன்கள் குவித்தார்.
கடந்த சீசனில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிய நிலையில், அந்த அணியின் நித்திஷ் ரானா கேப்டன் பொறுப்பை ஏற்றார். இருப்பினும் அந்த அணியால் சிறந்த பங்களிப்பை வழங்க முடியவில்லை. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி, 8 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் ஜசன் ராயும் இந்த சீசனில் விலக சிக்கலில் தவித்த கொல்கத்தா அணி, தற்போது அதற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பிலிப் சால்டை வாங்கி இருக்கிறது. கடந்த சீசனில் டெல்லி அணிக்காக அறிமுகமான சால்ட் ஒன்பது ஆட்டங்கள் விளையாடி 218 ரன்கள் குவித்தார். இதில் இரு அரை சதங்களும் அடங்கும். இதில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய சால்ட் 3 பந்துகளில் ஐந்து ரன்கள் மட்டுமே குவித்தார்.
நடந்து முடிந்த மினி ஏலத்தில் இவரை எந்த அணியும் எடுக்க முன் வரவில்லை. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரு சதங்களும் அடித்துத் தன்னை நிரூபித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட கொல்கத்தா அணி அவரை அவரது அடிப்படை விலையான 1.5 கோடிக்கு தற்போது வாங்கியுள்ளது. இந்த அதிரடி பேட்ஸ்மேன் சென்னை அணிக்கு கிடைக்க நல்ல வாய்ப்பு இருந்தது.
சமீபத்தில் காயமடைந்த நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே காயமடைந்துள்ள நிலையில், சிக்கலில் தவித்து வரும் சென்னை அணிக்கு இவர் ஒரு நல்ல தீர்வாக இருந்திருப்பார். மினி ஏலத்திலேயே இவரை சென்னை அணி எடுத்திருந்தால் கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணிக்குக் கிடைத்திருக்கும். எனவே இவரை தற்போது கொல்கத்தா அணியில் இவரது அதிரடியைக் காண ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

